நெகிழ வைத்த பெண்ணின் மனிதநேயம்

நிர்வாணமாக நெடுஞ்சாலையில் நடந்து சென்ற மனநலம் பாதிக்கப்பட்ட நபருக்கு, துணி உடுத்தி, உணவு வழங்கிய பெண்ணின் மனிதநேயம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாள் ஒன்றுக்குப் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயணிக்கும் இதே நெடுஞ்சாலையில்தான் ஆடை கூட இல்லாமல்…

நிர்வாணமாக நெடுஞ்சாலையில் நடந்து சென்ற மனநலம் பாதிக்கப்பட்ட நபருக்கு, துணி உடுத்தி, உணவு வழங்கிய பெண்ணின் மனிதநேயம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாள் ஒன்றுக்குப் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயணிக்கும் இதே நெடுஞ்சாலையில்தான் ஆடை கூட இல்லாமல் மனநலம் பாதித்த இந்த நபரும் இருந்திருக்கிறார். கண்டும் காணாமலும் கடந்து போனவர்களின் மத்தியில் ஆடையும், உணவும் கொடுக்கும் பெண்ணின் மனிதநேயம் அனைவரையும் நெகிழச்செய்திருக்கிறது.

திருநெல்வேலி மாவட்டம் மாநகர் பகுதியை ஒட்டிய சொக்கட்டான் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் நந்தினி. இவர், தனது உறவினர் வீட்டுக்குச் செல்வதற்காகக் கங்கைகொண்டானுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். திருநெல்வேலியிலிருந்து மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், மனநலம் பாதித்த நபர் ஒருவர், ஆடை ஏதும் இல்லாமல் சுற்றித் திரிவதைப் பார்த்துள்ளார்.

உடனடியாக தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி, அதிலிருந்த துணி ஒன்றை எடுத்து மனநலம் பாதித்த நபர் அருகில் சென்று, அவருக்கு அந்த துணியைக் கொடுத்திருக்கிறார். ஆனால் அவர் ஆடை வேண்டாம் என தவிர்த்திருக்கிறார். ஒருகட்டத்தில் நந்தினியே துணியை அந்த நபருக்குக் கட்டி விட்டிருக்கிறார்.

இதனையடுத்து துணியை உடுத்திக்கொண்டவர் அருகிலிருந்த சிறிய பாறை மீது அமர்ந்துகொண்டார். உடனே அருகிலிருந்த உணவகத்திற்குச் சென்ற நந்தினி, உணவும், தண்ணீரும் வாங்கி வந்து அவருக்குச் சாப்பாடு ஊட்டி விட்டதை அங்கிருந்த நபர் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. மேலும் நந்தினியின் இந்த மனிதநேய செயலை பலரும் மனமுவந்து பாராட்டி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.