போச்சம்பள்ளி அருகே கணவரே பார்த்த பிரசவம்: பெண் உயிரிழந்த பரிதாபம்!

போச்சம்பள்ளி அருகே இயற்கையாக பிரசவம் பார்த்ததில் பெண் உயிரிழந்தார். தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த அனுமந்தபுரம் கிராமத்தை சேர்ந்த மாதேஷ் (30). இவர் போச்சம்பள்ளி அருகே புளியம்பட்டி கிராமத்தை சேர்ந்த வேடியப்பன் என்பவரது மகள்…

போச்சம்பள்ளி அருகே இயற்கையாக பிரசவம் பார்த்ததில் பெண் உயிரிழந்தார்.
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த அனுமந்தபுரம் கிராமத்தை சேர்ந்த மாதேஷ் (30). இவர் போச்சம்பள்ளி அருகே புளியம்பட்டி கிராமத்தை சேர்ந்த வேடியப்பன் என்பவரது மகள் லோகநாயகியை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்தார். சிறுவயதிலிருந்தே இயற்கை முறையில் விளையும் பொருட்களை மட்டுமே உண்டு வந்தவர் லோகநாயகி. திருமணத்திற்கு கூட காய்கறி முதல் அரிசி வரை இயற்கை முறையில் விளைவித்த பொருட்கள் தான் பயன்படுத்தி சமைத்தனர்.
2 ஆண்டுகளுக்குப் பிறகு கர்ப்பமான அவர், அனுமந்தபுரம் கிராம செவிலியரிடம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொள்வதாக கூறிவிட்டு 15 நாட்களுக்கு முன்பு தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணிக்கு அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அப்போது கணவர் மாதேஷே பிரசவம் பார்த்துள்ளார். இதில் ஆண் குழந்தை சுகமுடன் பிறந்தது.
ஆனால், நச்சுக்கொடி வெளியே வராமல் ரத்தப்போக்கு ஏற்பட்டது. பின்னர் நச்சுக்கொடி வெளியே வந்ததும் லோகநாயகிக்கு வலிப்பு ஏற்பட்டது.  எனவே காலை 10 மணியளவில் போச்சம்பள்ளி தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
இதுகுறித்து புளியம்பட்டி கிராம செவிலியர் பாக்கியலட்சுமி புகாரின் பேரில் போச்சம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிராம செவிலியர் விசாரித்தபோது நச்சுகொடி வெளியே வராமல் ரத்த போக்கு ஏற்பட்டுள்ளது.  இதனால் உயிரிழந்துள்ளார் என தெரிவித்தார்.
அனகா காளமேகன்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.