“ஜானகியின் மறைவால், இந்தியா ஒரு இசைச் சின்னத்தை இழந்துள்ளது” – குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இரங்கல்!

புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகியின் மறைவால், இந்தியா ஒரு இசைச் சின்னத்தை இழந்துள்ளது என்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் தலைசிறந்த பின்னணி பாடகியான எஸ். ஜானகி(88), வயது மூப்பு காரணமாக நேற்று மைசூருவில் காலமானார். அவரது மறைவுக்கு திரைத்துறையினர் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று மாலை 5 மணிக்கு கனியனகுந்தி என்ற இடத்தில் இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டு ஜானகியின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஜானகி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகியின் மறைவால், இந்தியா ஒரு இசைச் சின்னத்தை இழந்துள்ளது. அவரது அபாரமான குரல்வளம் பல தலைமுறையினரை மெய்சிலிர்க்க வைத்தது. ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்த அவரது சிறப்பான இசைப் பயணத்தில், இந்தி, ஒடியா, துளு, உருது, பஞ்சாபி மற்றும் பெங்காலி உள்ளிட்ட சுமார் 20 இந்திய மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். காலத்தால் அழியாத அவரது இசை என்றும் மதிப்புமிக்கதாகத் திகழும்,; அவரது குடும்பத்தினருக்கும், எண்ணற்ற ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.