உலகக்கோப்பையை வென்றது சச்சினுக்காக தான் – எம்.எஸ்.தோனி நெகிழ்ச்சி

சச்சினுக்காக உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என நினைத்ததாகவும், அவருக்காக கோப்பையை வென்றதில் மகிழ்ச்சி என்றும், 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார். கடந்த 2011…

சச்சினுக்காக உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என நினைத்ததாகவும், அவருக்காக கோப்பையை வென்றதில் மகிழ்ச்சி என்றும், 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்தியா அணி உலகக் கோப்பையை வென்றது. இந்த வரலாற்றுச் சாதனையின் 12 ஆண்டுகள் நிறைவைக் கொண்டாடும் வகையிலான நிகழ்ச்சி சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இதில் முன்னாள் இந்திய அணியின் கேப்டனும், சிஎஸ்கே அணியின் இன்னாள் கேப்டனுமான எம்.எஸ்.தோனி மற்றும் முன்னாள் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் மைக்கேல் ஹசி கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய தோனி, “ICC விளையாட்டு என்றால் திறமை வாய்ந்த அணிகள் தான் போட்டியில் பங்கேற்கும். அதிலும் ஆஸ்திரேலியாவை வெற்றி கொள்வது எளிதான ஒன்று அல்ல. அது கடினமான செயலாகவே இருந்தது. எனினும் வெற்றி பெற்றது மகிழ்ச்சியை தந்தது. உலகக்கோப்பை தொடரில், அந்த தொடர் முழுவதும் எங்களை நாங்கள் கேள்வி கேட்டு கொள்ளவில்லை. Cool ஆக, அமைதியாக இருந்தோம்.

நம் அனைவருக்கும் தெரியும் அது சச்சினுக்கு இறுதி போட்டி என்று. தொடர் முழுவதும் நினைத்தோம். அவருக்காக இந்த கோப்பையை வெல்ல வேண்டும் என்று. அவருக்காக கோப்பையை வென்றதில் மகிழ்ச்சி. போட்டியை வெல்வதற்கு 20 நிமிடங்களுக்கு முன்னால் மிகவும் எமோஷனல் ஆக இருந்தது. மைதானத்தில் ’வந்தே மாதரம்’ என அனைவரும் பாடியபோது உணர்ச்சிகரமாக இருந்தது. வெற்றி பெற்றபின் என் வேலை முடிந்தது என நினைத்தேன். மனநிறைவாக இருந்தது.

இந்திய கிரிக்கெட் அணி தற்பொழுது நிலையாக தொடர்ச்சியான வளர்ச்சியை பெற்று வருகிறது. தற்போது பல்வேறு விதிமுறைகள் மாற்றப்பட்டிருந்தாலும், இந்திய அணி தொடர்ச்சியான வளர்ச்சிப் பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதற்கு ரசிகர்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்” என்று தெரிவித்தார்.

பின்னர் பேசிய ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் ஹசி, “மன அழுத்தங்களுக்கு மத்தியிலும் கூலாக இருப்பது தான் தோனியிடம் எனக்கு மிகவும் பிடித்தது” என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.