அரசியலுக்கு வருவேனா என்பது தொடர்பான கேள்விக்கு நடிகர் ஆர்யா பதிலளித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் பிரபல நடிகர்களில் ஒருவர் ஆர்யா. டெடி, சார்பட்டா பரம்பரை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஆர்யா நடிக்கும் திரைப்படம் கேப்டன். டெடி படத்தை இயக்கிய சக்தி செளந்தர் ராஜன் இப்படத்தையும் இயக்குகிறார். ராணுவ அதிகாரியாக ஆர்யா நடித்திருக்கிறார். சிம்ரன், ஐஸ்வர்யா லஷ்மி, ஹரிஷ் உத்தமன், காவியா ஷெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
செப்டம்பர் 8ம் தேதி படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது உள்ள திரைப்படங்கள் இரண்டு மணி நேரம் முதல் மூன்று மணி நேரம் என ரன்னிங் டைம் இருக்கும் நிலையில் ஆர்யாவின் கேப்டன் திரைப்படம் இரண்டு மணி நேரத்திற்கும் குறைவாக உள்ளது. படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் இந்த படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
படத்தின் புரோமோஷன் பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வரும் சூழலில் இப்படம் குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது ஆர்யாவிடம் பத்திரிக்கையாளர்கள் அரசியலுக்கு வருவீர்களா? என கேள்வி எழுப்பினர். அதற்கு, அரசியல் வரும் அளவிற்கு எனக்கு மூளை இல்லை என பதில் அளித்துள்ளார் ஆர்யா.







