வரும் 1-ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள மத்திய பட்ஜெட்டில், கோவையைச் சேர்ந்த சிறு,குறு தொழில் முனைவோர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அவர்களின் எதிர்பார்ப்புகள் என்ன? என்பது பற்றி தற்போது பார்ப்போம்…
தமிழகத்தில் தொழிற்துறையில் முக்கிய பங்கு வகிக்கும் கோவை மாவட்டத்தில் சிறு ,குறு தொழில்கள் அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த துறை, லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு அளித்து வரும் நிலையில், பட்ஜெட்டில் பல்வேறு கோரிக்கைகளைச் சிறு, குறு தொழில்துறையினர் முன் வைக்கின்றனர்.
கோவையில் பம்புசெட் உற்பத்தி நிறுவனங்கள் அதிகம் உள்ள நிலையில் காப்பர், இரும்பு ,அலுமினியம் உள்ளிட்ட மூலப்பொருட்கள் விலையேற்றத்தால் சிறு ,குறு பம்செட் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் பெரிய நிறுவனங்களோடு போட்டிப் போடமுடியவில்லை என்றும் கூறப்படுகிறது. அதனால், மூலப்பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள பம்புசெட் உற்பத்தியாளர்கள். சிறு ,குறு நிறுவனங்களுக்கு வருமான வரி விலக்கை 5 லட்சத்திலிருந்து 10 லட்சமாக அதிகப்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிறு ,குறு தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் விதமாகவும், அதன் வளர்ச்சிக்காகவும் ஒரு கோடி வரை பிணையம் இல்லாமல் கடன் வழங்க மத்திய அரசு உத்தரவிட்டாலும் சொத்து பிணையம் இருந்தால் மட்டுமே வங்கிகள் கடன் வழங்குவதாகத் தொழில் முனைவோர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
எனவே கடன் வழங்குவதைக் கண்காணிக்கும் விதமாக ஒரு ஆணையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கும் தொழில் முனைவோர்கள், வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்கள் இங்கு முதலீடு செய்வதை ஊக்குவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
உள்ளூர் தொழிலாளர்கள் தட்டுப்பாட்டால் வடமாநிலத்தவர்களை மட்டும் தொழில் நிறுவனங்கள் நம்பியுள்ள நிலையில் அண்மைக்காலமாகப் பீகார், உத்திர பிரதேசம் உள்ளிட்ட நகரங்களில் தொழில் நிறுவனங்கள் வளர்ந்து வருவதால் பெரும்பாலான வடமாநிலத்தவர்கள் திரும்ப வரவில்லை என்று கூறுகின்றனர். இதனால் ரோபோட்டிக் மற்றும் ஆட்டோ மெஷின் முறையில் தொழில் நடத்தத் தொழில் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாகவும், எனவே அதை ஊக்குவிக்கும் விதமாகக் கடன் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கின்றனர் தொழில் நிறுவனங்கள்.
தங்களது கோரிக்கைகள் எந்த அளவுக்கு நிறைவேற்றப்படும் என, இந்த பட்ஜெட்டைக் எதிர் நோக்கிக் காத்திருக்கின்றனர் கோவை சிறு ,குறு தொழில் நிறுவனங்கள்…
கோவையிலிருந்து முதன்மை -செய்தியாளர் பிரசாந்த்..







