தமிழகத் தொழில்துறை மீது எழும் தொடர் குற்றச்சாட்டுகளுக்கு மௌனம் கலைப்பாரா முதலமைச்சர்? – டிடிவி தினகரன்!

தமிழகத்தின் தொழில் முதலீட்டு ரகசியங்கள் கசிந்ததா என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “தமிழகத்திற்கு புதிய தொழில் முதலீடுகளைக் கொண்டு வருவதற்காகவும், முதலீட்டாளர்களுக்கும் அரசுக்கும் இடையே பாலமாகச் செயல்படுவதற்காகவும் உருவாக்கப்பட்ட Guidance TN அமைப்பின் செயல்பாடுகள் குறித்துத் தற்போது வெளியாகி வரும் செய்திகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

தமிழகத்தில் முதலீடு செய்ய முன்வந்த நிறுவனங்களின் ரகசியத் தகவல்கள் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்குக் கசியவிடப்பட்டதாகவும், இதனால் 15 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு பணிச்சூழல் மோசமடைந்ததால் தாங்களாகவே பணியிலிருந்து விலகியதாகச் சம்பந்தப்பட்ட முன்னாள் ஊழியர்கள் தெரிவித்திருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.

தமிழகத்திற்கு வர வேண்டிய தொழில் முதலீடுகள் அண்டை மாநிலங்களுக்குச் செல்வதைத் தடுக்கத் தவறிய தவெக அரசு, தனது நிர்வாகத் தோல்விக்குக் காரணம் தேடுவதற்காக வழிகாட்டி நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்களைக் குற்றவாளிகளாகச் சித்தரிக்க முயல்கிறதா? முதலீடுகளை ஈர்க்க வேண்டிய அரசே, முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையின்மையை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டுவிட்டு, தனது தோல்வியை மறைப்பதற்காகப் பிறர் மீது பழிபோடுகிறதா என்ற கேள்வி எழுவதோடு தற்போதைய தொழில்துறை அமைச்சர் கடந்த காலங்களில் ஆந்திர மாநில முதலமைச்சருக்காகத் தேர்தல் பணிகளில் நேரடியாக ஈடுபட்டதாகக் கூறப்படுவதும், பொதுமக்களிடையே பல்வேறு சந்தேகங்களையும் விமர்சனங்களையும் எழுப்புகிறது.

புதிய முதலீடுகளை ஈர்க்கவோ, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளைப் பெருக்கவோ ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்காமல், ரீல்ஸ்களை மட்டுமே மூலதனமாகக் கொண்டு மக்களை ஏமாற்றும் தவெக அரசு, ஆட்சிக்கு வந்த நூறு நாட்களிலேயே ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவிற்கான முதலீடுகளை ஈர்த்துவிட்டதாக மார்தட்டிக்கொள்கிறது. அந்த முதலீடுகள் எவை, அவற்றில் எத்தனை திட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன, எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகியுள்ளது என்ற விவரங்களைப் பொதுவெளியில் வெளியிடத் தயாரா?

சட்டம் ஒழுங்கு சீர்கேடு, அறிவிக்கப்படாத மின்வெட்டு, நிர்வாக அலட்சியம் எனத் தொழில் தொடங்குவதற்குப் பாதகமான சூழலை உருவாக்கிவிட்டு, விளம்பர அரசியலில் மட்டுமே கவனம் செலுத்தும் தவெக அரசின் அணுகுமுறை தமிழகத்தின் தொழில் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது.

இதனையே அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆந்திர முதலமைச்சர், “நீங்கள் மசாலாவை எதிர்பார்க்கிறீர்கள்; நாங்கள் ஆந்திராவின் வளர்ச்சியை எதிர்பார்க்கிறோம்” என்று குறிப்பிட்டிருப்பது, தற்போது கவனம் பெறுகிறது.

எனவே, Guidance TN அமைப்பில் பணியாற்றிய 15 ஊழியர்கள் தொடர்பான சர்ச்சையின் உண்மைத்தன்மை என்ன? அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டார்களா அல்லது தாங்களாகவே பணியிலிருந்து விலகினார்களா? தமிழகத்தின் தொழில் முதலீடுகள் தொடர்பான ரகசியத் தகவல்கள் பிற மாநிலங்களுக்குக் கசியவிடப்பட்டனவா? அவ்வாறு நடைபெற்றிருந்தால், அதற்குப் பொறுப்பானவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? தமிழகத்திற்கு வர வேண்டிய முதலீடுகள் ஆந்திராவுக்குச் செல்வதைத் தடுக்கவும், தமிழகத்தின் தொழில் முதலீட்டுச் சூழலை மீட்டெடுக்கவும் அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்ன? என்பன உள்ளிட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் வெளிப்படையான பதிலளிக்க வேண்டும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.