ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரானது அடுத்த மாதம் 7-ந்தேதி தொடங்குகிறது. இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும் இப்போட்டியில் 20 அணிகள் பங்கேற்கின்றனர். வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டு கே.கே.ஆர். அணியில் இருந்து வங்க தேச அணி வீரர் முஸ்தபிஜுர் ரஹ்மான் நீக்கப்பட்டார்.
இதையடுத்து பாதுகாப்பு காரணத்தை கூறி இந்தியாவில் நடைபெறும் போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என வங்கதேச அணி வேண்டுகோள் விடுத்தது. ஆனால் இக்கோரிக்கையை ஐ.சி.சி ஏற்றுக்கொள்ளவில்லை.
இதனால் வங்கதேச அணி உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது. வங்கதேச அணிக்கு பதிலாக ஸ்காட்லாந்து அணி தொடரில் சேர்க்கப்பட்டுள்ளது. அதே நேரம் வங்கதேச அணிக்கு ஆதரவாக பாகிஸ்தான் அணியும் உலக கோப்பை தொடரை புறக்கணிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்த சூழலில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோஷின் நக்வி, அந்நாட்டு பிரதமர் ஷெபாஷ் ஷரீஃப்பை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்.
இந்த சந்திப்பு தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், பிரதமர் ஷெரீப் உடன் ஆக்கப்பூர்வமான ஆலோசனை நடத்தினேன். அப்போது ஐசிசி விசயம் தொடர்பாக அவருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. உலகக் கோப்பை தொடர்பான அனைத்து சாத்தியக்கூறுகளையும் களத்தில் கொண்டு பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். அது ஏற்றுக் கொள்ளப்பட்டது. வெள்ளிக்கிழமை அல்லது அடுத்த திங்கட்கிழமை இறுதி முடிவு எடுக்கப்படும்.
இதையடுத்து டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா பங்கேற்குமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.







