“அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவில் பங்கேற்கப் போவதில்லை” – லாலு பிரசாத்!

அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவில் பங்கேற்கப் போவதில்லை என ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் தெரிவித்துள்ளார்.   அயோத்தி ராமர் கோயில் கருவறையில் மூலவர் குழந்தை ராமர் சிலை வரும் ஜனவரி…

அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவில் பங்கேற்கப் போவதில்லை என ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் தெரிவித்துள்ளார்.  

அயோத்தி ராமர் கோயில் கருவறையில் மூலவர் குழந்தை ராமர் சிலை வரும் ஜனவரி 22-ஆம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.  இந்த விழாவில் கலந்து கொள்ள நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை உத்தர பிரதேச மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

இந்த விழாவில் பிரதமர் மோடி,  மத்திய அமைச்சர்கள்,  பாஜக ஆளும் மாநில முதலமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.  தவிர எதிர்கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  திரைத்துறை உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.  இவ்வாறு சன்னியாசிகள், மடாதிபதிகள்,  முக்கிய பிரமுகர்கள் என மொத்தம் 8,000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:  ‘கேலோ இந்தியா’ விளையாட்டுப் போட்டி – நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

இந்த நிலையில் அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை நிகழ்ச்சியில் பங்கேற்கப் போவதில்லை என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் தெரிவித்துள்ளார்.  பாட்னாவில் உள்ள தனது இல்லத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:  இந்தியா கூட்டணி தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  இது போன்ற முக்கியமான விஷயத்தில் உடனடியாக முடிவு எடுக்க முடியாது.   அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவில் நான் பங்கேற்கப் போவதில்லை.”

இவ்வாறு அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.