உள்ளாட்சி தேர்தலில் திமுகவுக்கு கணிசமான வெற்றியை அறுவடை செய்து, ஒன்றியக்குழுத்தலைவராக தன் அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்த ஐ.பெரியசாமி, இன்று அதே துறையின் அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். அது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் 2021 ஆம் ஆண்டு மே மாதம் பொறுப்பேற்றார். தற்போது அமைச்சரவை விரிவாக்கத்தின் போது,உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.அத்துடன்,10 அமைச்சர்களின் துறைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டன. கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி ஊரக வளர்ச்சி துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஊரக வளர்ச்சி துறையின் வசம் ஊரக வளர்ச்சி, கிராம ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள் போன்ற துறைகள் வருகின்றன. ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 12,525 கிராம ஊராட்சிகள், 388 ஊராட்சி ஒன்றியங்கள், 36 மாவட்ட ஊராட்சிகள் உள்ளன.
மாநிலத்தின் அதிக அளவு நிலப்பகுதியுடனும், பெரும்பான்மையான மக்களோடும் தொடர்புடையது ஊரக வளர்ச்சி துறை. இத்துறைக்கு ஐ.பெரியசாமி போன்ற களப்பணி அனுபவம் கொண்ட மூத்த அமைச்சர் தேவை என்கின்றனர் நிபுணர்கள். யார் இந்த ஐ.பெரியசாமி ?
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவில் பிறந்த ஐ.பெரியசாமி வணிகவியலும்,சட்டமும் பயின்றவர். அதிமுகவின் கோட்டை என்றிருந்த திண்டுக்கல் மாவட்டத்தில், திமுகவை மீண்டும் நிலைபெற வைத்தவர்களில் ஒருவர். தற்போது திமுகவின் துணைப்பொதுச் செயலாளர்
அதிமுகவுக்கு முதல் வெற்றியை பெற்றுத்தந்தது திண்டுக்கல் மக்களவை தொகுதி. 1980 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுக எம்.பியாக இருந்து, திமுக வில் வேட்பாளராக நின்ற மாயத்தேவர் மீண்டும் வெற்றி பெற்றார். திண்டுக்கலில் திமுக வென்றதை திமுக தலைமையே வியப்பாக தான் பார்த்தது. கட்சிக்காக தொய்வில்லாமல் உழைத்த, முக்கிய தளகர்த்தர்களில் ஒருவராக இருந்த ஐ.பெரியசாமியின் உழைப்பு திமுக வின் தலைமையின் கவனத்தை ஈர்த்தது.
1977 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக தேர்தலில் வென்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக தொடர்ந்தார் எம்.ஜி.ஆர். பல ஆண்டுகள் நடத்தப்படாமல் இருந்த உள்ளாட்சி தேர்தலை 1986 ஆம் ஆண்டு நடத்தினார். அந்த தேர்தலில் ஆளும் அதிமுகவை விட, எதிர்க்கட்சியான திமுக பெரும்பாலான இடங்களில் வென்று சாதனை படைத்தது..
அப்போது, திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு ஒன்றிய குழுத் தலைவராக ஐ. பெரியசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்று முதல் அவருக்கு தொடர்ந்து ஏறுமுகம்தான்.
1989 ஆம் ஆண்டு தேர்தலில் ஆத்தூர் தொகுதி மக்கள் ஐ.பெரியசாமியை முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்தனர். தற்போது 6 வது முறையாக எம்.எல்.ஏ வாக தேர்வாகியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் அனைத்து தரப்பினருக்கும் மக்கள் பணி செய்வதில் வருவதில் சளைக்காதவர்.
1996 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் முதலமைச்சராக பொறுப்பேற்ற மு.கருணாநிதியின் அமைச்சரவையில் பத்திரப்பதிவு, சத்துணவு, ஊரக தொழில்துறை , வருவாய், சட்டம், வீட்டு வசதிதுறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். 2021 ஆம் ஆண்டு அமைந்த மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் கூட்டுறவுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.கூட்டுறவு துறையில் நகைக்கடன் தள்ளுபடி, மகளிர் சுய உதவிக் குழு கடன் தள்ளுபடி போன்ற முக்கிய திட்டங்களை செயல்படுத்தினார்
மாநிலத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் ஊரக வளர்ச்சி துறையின் அமைச்சராகியுள்ள பெரியசாமி, சரிவர செயல்படாமல் உள்ள கிராம ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் மறுமலர்ச்சியையும் வளர்ச்சியையும் ஏற்படுத்துவாரா?… பொறுத்திருந்து பார்க்கலாம்…
- ரா.தங்கபாண்டியன், நியூஸ் 7 தமிழ்