அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கின் விசாரணை வரும் ஜனவரி மாதம் 4ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த ஜூலை 11ந்தேதி முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரப்பு கூட்டிய அதிமுக பொதுக்குழுவில் அவர் அக்கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த பொதுக்குழு செல்லும் என சென்னை உயர்நீதிமன்ற இருநீதிபதிகள் அமர்வு அளித்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை நடத்துவதற்கு இடைக்கால தடை விதித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வு முன்பு இன்று நடைபெற்றது. அப்போது பொதுக்குழு மற்றும் தீர்மானங்கள் தொடர்பாக ஓபிஎஸ் தரப்பில் தொடரப்பட்ட வழக்கு காலாவதியாகிவிட்டதாக இபிஎஸ் தரப்பில் வாதிட்டப்பட்டது. எனவே இடைக்கால மனுவை விசாரணை செய்ய வேண்டும் என்றும் குறைந்தபட்சம் விடுமுறைக்கு பின் உடனடியாக விசாரணை செய்ய வேண்டும் என்றும் இபிஎஸ் தரப்பில் வாதிட்டப்பட்டது.
அப்போது ”பொதுக்குழுவை எதிர்த்த வழக்கு எந்த வகையிலும் காலாவதியாகவில்லை. ஏனெனில் பொதுக்குழு கூட்டப்பட்ட நடைமுறை மற்றும் இயற்றப்பட்ட தீர்மானங்கள் சட்ட விதிகளை மீறியது ஆகும். எனவே எதிர்தரப்பு வாதம் தவறானது“ என ஓபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணையை வரும் ஜனவரி 4ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.