சூரியனிலிருந்து பூமி அதிகபட்ச தொலைவுக்குச் சென்றதால் தற்பொழுது பூமி இயல்பை விட சற்று குளிர்ச்சி அதிகமாக இருக்கும் என்ற சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வந்தன. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், இந்தச் செய்தியை சென்னை வானிலை ஆய்வு மையம் மறுத்திருக்கிறது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
அதிக குளிர் நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை எதுவும் விடுத்து அறிக்கை வெளியிடவில்லை. இதுபோன்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது. அது தவறானது. அதுபோன்ற எந்தவொரு எச்சரிக்கை அறிவிப்பையும் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிடவில்லை என்று அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சூரியனை பூமி உள்ளிட்ட கோள்கள் சுற்றி வருகின்றன. பூமி ஒரு ஆண்டில் சூரியனில் இருந்து அதன் தொலை துார நிலைக்கு செல்லுமாம். இது அல்பெலியன் என்றும், பூமி சூரியனுக்கு மிக அருகில் இருப்பது பெரிஹேலியன் என்றும் அழைக்கப்படும்.
அல்பெலியன், பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 6ம் தேதி வாக்கிலும், பெரிஹேலியன் ஜனவரி 2ம் தேதி வாக்கிலும் தொடங்கும். பூமியில் இருந்து சூரியனுக்கான சராசரி தூரம் 150 மில்லியன் கிலோ மீட்டராக இருக்கும்.
அல்பெலியன் நிலையில் இருக்கும் போது 152 மில்லியன் கிலோ மீட்டராக இருக்கும்.
அதன் பிறகு அது பெரிஹெலியன் நிலையில் இருக்கும் போது பூமியில் இருந்து சூரியனுக்கான தூரம் 147 மில்லியன் கிலோ மீட்டராக இருக்கும். இதனால் பூமி, அல்பெரியன் நிலையில் இருக்கும் போது வழக்கத்தை விட குளிர் அதிகம் இருக்கும் என்று கூறப்படுகிறது.








