மகாராஷ்ட்ர அமைச்சரவையில் பாஜகவுக்கு 25 இடங்களும் ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு 13 இடங்களும் ஒதுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மகாராஷ்ட்ராவில் சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசுக்கு, அக்கட்சியிலேயே எழுந்த எதிர்ப்பை அடுத்து அவர் பதவி விலகினார்.
இதையடுத்து, சிவ சோனாவின் அதிருப்திக் குழுவின் தலைவரான ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராகவும், பாஜகவின் தேவேந்திர பட்னவிஸ் துணை முதலமைச்சராகவும் பதவி ஏற்றனர்.
அமைச்சரவை விரிவாக்கம் குறித்து இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில், தற்போது அதில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, அமைச்சரவையில் பாஜகவுக்கு 25 இடங்களும், ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு 13 இடங்களும் ஒதுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மகாராஷ்ட்ர சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக 105 உறுப்பினர்களைக் கொண்டிருக்கிறது. சிவ சேனாவின் மொத்தமுள்ள 55 எம்எல்ஏக்களில் 40 பேர், தற்போது ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதை கருத்தில் கொண்டு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.










