ஜார்க்கண்ட் மாநிலத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் இடையே புதிய உறவை உருவாக்குவோம் என்று சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட பாஜக மூத்த தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கோவையில் இருந்து விமானம் முலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் பாஜக துணை தலைவர் கரு. நாகராஜன் தலைமையில் நிர்வாகிகள் சால்வை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர்.
இதையும் படிக்கவும்: தேர்தல் ஆணையம் முறையாக நடந்தால் ஈவிகேஎஸ் தகுதி நீக்கம் செய்யப்படுவார்- எஸ்.பி.வேலுமணி
அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களை சி.பி. ராதாகிருஷ்ணன் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்திற்கு புதிய வரலாற்று சிறப்பை குடியரசு தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர் தந்து உள்ளனர். ஒரே மாநிலத்தை சேர்ந்த 3 பேர் ஆளுநராக இருப்பது தமிழகத்திற்கு இதுவே முதன்முறை ஆகும். இந்த வரலாறு ஒட்டுமொத்த தமிழகத்திற்கு கிடைத்த பெருமையாக கருதுகிறோம். தனிப்பட்ட மனிதருக்கு கிடைத்த பெருமையோ அங்கீகாரமோ அல்ல என்றார்.
கடுமையான உழைப்பு, வெற்றியே பாராமல் உழைத்தால் கூட உரிய அங்கீகாரம் தருவதற்கு மோடி தயங்கமாட்டார் என்பதை நிரூபித்து உள்ளது. தமிழகத்தின் மீதும், தமிழ் இனத்தின் மீதும், தமிழ் கலாச்சார, பண்பாட்டு, இலக்கியம் ஆகியவற்றின் மீது குடியரசு தலைவர், பிரதமர் ஆகியோருக்கு உள்ள பிடிப்பாக அமைந்து உள்ளது. ஒரிரு நாளில் பதவி ஏற்பு முடிவாகும் என்று கூறினார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தை பொறுத்த வரை அதிகமாக பழங்குடி, தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ்கின்றனர். அவர்களின் மேன்மைக்கு உழைப்பது தான் தமிழகத்திற்கு பெருமையாக இருக்கும். ஜார்க்கண்ட்டிற்கும் தமிழகத்திற்கும் புதிய உறவை உருவாக்குவோம் என்றார்.
மேலும், ஆளுநர் அரசியல் குறித்து அதிகம் பேசாமல் இருப்பது நல்லது என நினைக்கிறேன். வழக்கறிஞராக இருக்கும் போது கட்சிக்காரருக்காக வாதாடுவது நியாயம். நீதிபதியாக வந்து விட்டால் நீதியை மட்டுமே தர வேண்டும். ஆளுநர் பதவிக்கு வந்து விட்டால் அரசியலில் நாட்டம் கொள்ளாமல் மாநிலத்தின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவது சிறந்தது என அவர் கூறினார்.







