மும்பை-ஷீரடி வந்தே பாரத் ரயிலில் பயணி ஒருவருக்கு ‘தூசி நிறைந்த கார்ன்ஃப்ளேக்ஸ்’ வழங்கப்பட்டதாக எழுந்த புகாருக்கு ரயில்வே துறை பதிலளித்துள்ளது.
மும்பை-ஷோலாபூர் மற்றும் மும்பை-ஷீரடி இடையே இரண்டு ‘வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்’ ரயில்களை கடந்த 10-ஆம் தேதி அன்று பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த வந்தே பாரத் ரயில் மும்பை-ஷோலாபூர் இடையே 455 கிலோ மீட்டர் தூரத்தை, 6 மணி நேரம் 30 நிமிடத்தில் சென்றடையும்.
இதேபோல் மும்பை-ஷீரடி இடையே தொடங்கி வைக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் 343 கிலோ மீட்டர் துரத்தை, 5 மணி நேரம் 25 நிமிடத்தில் சென்றடையும். இந்த ரயில்களில் ஒரு வழிப்பயணம், எக்ஸிகியூட்டிவ் வகுப்புக்கான கட்டணம், உணவு கட்டணம் என ஒவ்வொன்றிற்கும் கூடுதல் கட்டணங்களும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
இப்படி அதிநவீன வசதிகளுடன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பிரதமரால் தொடங்கிவைக்கப்பட்ட இந்த ரயிலில் சுகாதாரம் கடைபிடிக்கப்படாமல் “தூசி நிறைந்த கார்ன்ஃப்ளேக்ஸ்” உணவை பயணி ஒருவருக்கு வழங்கியதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.
பாதிக்கப்பட்ட அந்த பயணி தனக்கு வழங்கப்பட்ட அந்த தூசி நிறைந்த “கார்ன்ஃப்ளேக்ஸ்” உணவை புகைப்படம் எடுத்து தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ள நிகழ்வு வைரலாகி வருகிறது. விரேஷ் நர்கர் என்ற அந்த பயணி கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது ட்விட்டரில் சாய்நகர் ஷீரடிக்கு பயணம் செய்யும் போது ரயிலில் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து புகார் தெரிவித்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
மேலும் விரேஷ் நர்கர் தனது பதிவில் வந்தே பாரத் ரயிலை “அற்புதம்” என்று கூறி உள்ளதுடன் , எக்சிகியூட்டிவ் கிளாஸ் கோச்சுகள் மற்றும் சுத்தம் செய்யும் முறைகள் போன்ற பிரச்னைகளையும் பட்டியலிட்டுள்ளார். அதனுடன் ஒரு தூய்மைப் பணியாளர் குப்பைகளை அகற்றும், புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளர்.
2) Since the flooring is carpet now, Dyson Vacuum cleaners should be provided instead of traditional method of sweeping the floor. @Central_Railway @RailMinIndia @AshwiniVaishnaw @GM_CRly
Also the food quality can be improved, no1 prefers dusty cornflakes in India. pic.twitter.com/60BbrMmwuq— Viresh Narkar (@vireshnarkar) February 12, 2023
இவரின் இந்த பதிவிற்கு இந்திய ரயில்வே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளது. அந்த பதிவில் “உங்கள் புகார் RailMadad இல் பதிவு செய்யப்பட்டுள்ளது. புகார் தொடர்பான விவரங்கள் புகார் எண் மற்றும் உங்கள் மொபைல் எண்ணுக்கு SMS மூலம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த இணைப்பின் மூலம் உங்கள் புகாரை நீங்கள் கண்காணிக்கலாம் என IRCTC அதிகாரி”, குழு பதிலளித்துள்ளது.
இதே போல் ஏற்கனவே இந்த மாத தொடக்கத்திலும் செகந்திராபாத்-விசாகப்பட்டினம் வந்தே பாரத் ரயிலில் வழங்கப்படும் உணவின் தரத்தைக் காட்டும் ஒரு நபரின் வீடியோவை ஒரு பத்திரிகையாளர் வெளியிட்டார். வீடியோவில், அந்த நபர் வறுத்த உணவுப் பொருளில் இருந்து அதிக அளவு எண்ணெயை பிழியுவதைக் காண முடிந்தது. ஐஏஎஸ் அதிகாரி அவனிஷ் ஷரனும் ட்விட்டரில் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அங்கு ஒரு தொழிலாளி துடைப்பம் பிடித்தபடி காலி தண்ணீர் பாட்டில்கள் போன்ற குப்பைகளை அகற்றுவதைக் கண்டார். ரயிலின் தரையில் பிளாஸ்டிக் பைகள், காகிதங்கள் சிதறிக் கிடந்தது.
வந்தே பாரத் ரயில்கள் இப்போது இந்தியாவில் 10 வழித்தடங்களில் இயக்கப்பட்டு வரும் நிலையில், பயணிகளின் நலனை கருதி சுகாதார நடவடிக்கைகளை சரியான முறையில் கடைபிடிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
- பி. ஜேம்ஸ் லிசா










