கோவையில் தொடரும் பெட்ரோல் குண்டுவீச்சால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தலைமைச் செயலாளர் இறையன்பு, கோவை மாவட்ட ஆட்சியர், கோவை மாநகர காவல் ஆணையர், மேற்கு மண்டல காவல்துறை ஐஜி மற்றும் அனைத்து அதிகாரிகளுடன் அவரச ஆலோசனை நடத்தி அங்குள்ள நிலைமை குறித்தும், என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்? என்பது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
கோவையில் இதுபோன்ற சூழல் உள்ள நிலையை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் எப்படி சமாளிப்பார்? சமாளிப்பாரா? என்ற கேள்வி காவல்துறை மத்தியில் எழுந்துள்ளது. ஆனால் பாலகிருஷ்ணன் இதுபோன்ற பல நெருக்கடியான நிலையை சாதுர்யமாக செயல்பட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்த சம்பவங்கள் பல நடந்துள்ளன.
பாலகிருஷ்ணனுக்கு சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம், முகிலன் குடியிருப்பு. 2003 ஆம் ஆண்டு தமிழக காவல்துறை பேட்ச் அதிகாரியான இவர், ஏற்கனவே ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்று 2 ஆண்டுகள் அகில இந்திய வானொலி நிலையம், தூர்தர்ஷன் உள்ளிட்ட பத்திரிகை தகவல் தொடர்பு நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார்.
விவசாய குடும்பத்தில் பிறந்த இவர் வேளாண் முதுகலை பட்டப்படிப்பு முடித்தவர். இதன் பின்னர் ரயில்வே கணக்கு சேவை தேர்விலும் வெற்றி பெற்று இருந்தார். அகில இந்திய சிவில் சர்வீஸ் தேர்வில் இதர பிற்படுத்தப்பட்டோர் அகில இந்திய அளவில் 140 வது இடம் பிடித்தார்.
இதன்மூலம் இந்திய வெளியுறவுத் துறையிலும் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. இருப்பினும் தன் தாயாரின் விருப்பத்திற்காக காவல்துறை பணியை தேர்வு செய்தவர் பாலகிருஷ்ணன். இதன் பின்னர் திருவண்ணாமலை, தேனி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் காவல் கண்காணிப்ளராக பணியாற்றி வந்தார். கிராமத்திற்கு காவல்துறை கொண்டு செல்வோம் என்ற திட்டத்தை முன்னெடுத்து கிராமங்களில் தத்தெடுத்து, கிராமங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தார்.
2009ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவை தேர்தலின்போது மதுரை தொகுதி சவால் நிறைந்தாக கூறப்பட்டது. அப்போது பாலகிருஷ்ணன் மதுரை மாவட்ட எஸ்பியாக சிறப்பாகச் செயல்பட்டு சட்டம் ஒழுங்கை பாதுகாத்ததாக அனைவரது பாராட்டையும் பெற்றார்.
மீண்டும் 2012-14 ஆண்டு காலகட்டத்தில் மீண்டும் மதுரை மாவட்ட எஸ்பியாக பாலகிருஷ்ணன் சிறப்பாகப் பணியாற்றினார். மதுரை மாவட்ட எஸ்பியாக பாலகிருஷ்ணன் இருந்தபோது மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட மதுரை கிரானைட் ஊழல் தொடர்பாக 80 வழக்குகளை அதிரடியாக பதிவு செய்தார்.
2011-ஆம் ஆண்டு திருப்பூர் நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது சிக்கி கொண்ட 400 பேரை திருப்பூர் காவல் கண்காணிப்பாளராக இருந்த பாலகிருஷ்ணன் தலைமையிலான காவல் குழுவினர் உயிருடன் மீட்ட சம்பவம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. 2013 ஆம் ஆண்டு ஊர்க் காவல் படையில் திருநங்கைகளை பணியமர்த்தி சமூக மாற்றத்தை ஏற்படுத்தினார் என்ற பாராட்டை பெற்றவர் பாலகிருஷ்ணன்.
2017 ஆம் ஆண்டு மெரீனா கடற்கரையில் நடந்த ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தை எந்த வன்முறை சம்பவமும் இன்றி கையாண்டதில் அப்போது மயிலாப்பூர் காவல் துணை ஆணையராக இருந்த பாலகிருஷ்ணன் செயல்பட்ட விதம் அனைவரது பாராட்டையும் பெற்றது.
2019-ஆம் ஆண்டு சென்னை மாநகரில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது கோட்டூர்புரம் பகுதியில் உள்ள குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் வெள்ளம் சூழ்ந்து கொண்டபோது படகில் சென்று பொதுமக்களை மீட்டு பாராட்டை பெற்றார். 2020 ஆம் ஆண்டு ரயில்வே டிஐஜியாக பணியாற்றியபோது ரயில் நிலையங்களில் சுற்றித் திரிந்த 500க்கும் மேற்பட்ட ஆதரவற்றோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மறுவாழ்வு வழங்கியதற்காக பாலகிருஷ்ணனுக்கு பாராட்டு கிடைத்தது.
2021 ஆம் ஆண்டு திருச்சி சரக ஐஜியாக பணியாற்றியபோது போலீஸ் கிளப்புகளை தொடங்கி குழந்தை திருமணம், குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை எதிர்கொள்ளும் வகையில் பல்வேறு பயிற்சிகளை வழங்கி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். தற்போது கோவை மாநகர காவல் ஆணையராக பாலகிருஷ்ணன் பணியாற்றி வருகிறார்.
கோவையில் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையை திறமையாக சமாளிப்பார் என்றும், சட்டம் ஒழுங்கை காப்பார் என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-சுப்பிரமணியன்










