ஈரோடு மாவட்டம், தாளவாடியில் வாழைத்தோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானைகள் 1000 க்கும் மேற்பட்ட வாழை மரங்களை சேதம் செய்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தாளவாடி, ஜீரகள்ளி உள்ளிட்ட வனச்சரகங்களில் காட்டு யானைகள் அதிகமாக வசிக்கின்றன. கடந்த சில மாதங்களாக காட்டு யானைகள் தினசரி விவசாய நிலங்களில் நுழைவதும், விவசாய பயிர்களை சேதம் செய்து வருவதும் தொடர்கதையாகி வருகிறது.
இந்த நிலையில் தாளவாடி வனச்சரகத்துக்கு தாளவாடி கிராமத்தில் சுரேஷ் ராவ்(50) என்பவரது வாழை தோட்டத்துக்குள் நேற்று இரவு புகுந்த காட்டு யானைகள் சுமார் 1000க்கும் மேற்பட்ட வாழை மரங்களை சேதப்படுத்தி உள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
சேதமடைந்த வாழை மரங்களுக்கு அரசு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும், விவசாய நிலங்களில் யானைகள் நுழைவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
—-ம. ஶ்ரீ மரகதம்







