வன விலங்கு திருத்த மசோதாவால் மலை வாழ் மக்கள் அச்சத்தில் இருப்பதாக திமுக மக்களவை எம்.பி. ஆ.ராசா தெரிவித்தார்.
டெல்லியில் அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நேற்றைய தினம் நாடாளுமன்ற மக்களவையில் வன விலங்கு திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் உத்தரவின் படி புலிகள், யானைகள் சரணாலயம் அருகே 1 கிலோ மீட்டர் பரப்பளவில் பாதுகாக்கப்பட்ட இடங்களாக பாதுகாக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
இதனால் உதகை உள்ளிட்ட மலை பிரதேசங்ககளில் வாழும் மக்கள் அச்சமடைந்து உள்ளனர். இந்த விவகாரத்தில் மக்களை எந்த வகையிலும் பாதிக்காத வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும் நீதிமன்றத்தில் மனு வழங்கும் எனவும் மத்திய அமைச்சர் உறுதி அளித்ததார் என்று ஆ.ராசா தெரிவித்தார்.
முன்னதாக, இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் பேசினார்.
இதுதொடர்பாக அவர் டுவிட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
வனவிலங்குகள் பாதுகாப்பு திருத்த மசோதா மீதான விவாதத்தில் உரையாற்றினேன். வனத்திற்கான நிலப்பரப்பு குறைந்தது 33% இருக்க வேண்டும். ஆனால் எல்லா மாநிலங்களிலும் அவ்வாறு இல்லையென்றே தெரிய வருகிறது. வனவிலங்குகள் குடியிருப்புகளுக்குள் நுழைவதற்கு இதுவே காரணம் என்றும் தெரிய வருகிறது.
இம்மசோதா யானைகளைப் பாதுகாப்பதற்கு மாறாக வணிக நோக்கில் வாங்கவும் விற்கவும் வழிவகுக்கிறது. மாநில அளவிலான குழுக்களில் தன்னார்வ வன உயிர் ஆர்வலர்களை நியமிக்க வேண்டும். அதற்கேற்ப இம்மசோதாவைத் திருத்திய பின்னர் நாடாளுமன்ற ஒப்புதலுக்கு வைக்கவேண்டும் என்று அந்தப் பதிவில் திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.









