‌‌கலைஞர் வேகம் 100, ஸ்டாலின் வேகம் 150: புகழ்ந்த ஆ.ராசா

கலைஞர் 100 கி.மீ. வேகம் சென்றபோது ஸ்டாலின் 70 கிலோமீட்டர் வேகம் வருவாரா என எதிர்பார்த்த நிலையில், ஸ்டாலின் 150 கிலோமீட்டர் வேகத்தில் மக்கள் பணியாற்றுவதாக ஆ.ராசா புகழாரம் சூட்டினார். கோவை மாவட்டம், சூலூரில்…

கலைஞர் 100 கி.மீ. வேகம் சென்றபோது ஸ்டாலின் 70 கிலோமீட்டர் வேகம் வருவாரா என எதிர்பார்த்த நிலையில், ஸ்டாலின் 150 கிலோமீட்டர் வேகத்தில் மக்கள் பணியாற்றுவதாக ஆ.ராசா புகழாரம் சூட்டினார்.

கோவை மாவட்டம், சூலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக அரசால் பாவேந்தர் பாரதிதாசன் விருது பெற்ற செந்தலை கவுதமனுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் உள்ளிட்டவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர்.

விழாவில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, பெரியார் சொன்னதைப் போல் திராவிட தமிழை வளர்த்தவர் புலவர் செந்தலை கவுதமன். கலைஞர் 100 கிலோமீட்டர் வேகம் சென்றால், ஸ்டாலின் 70 கிலோமீட்டர் வேகமாவது செல்வாரா என எதிர்பார்த்தபோது, மக்கள் பணியில் 150 கிலோ மீட்டர் வேகத்தில் முதல்வர் ஸ்டாலின் பயணிப்பதுடன், மத்திய அரசுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வருவதாக அவர் புகழாரம் சூட்டினார். இந்திரா காந்தி இந்தியாவை அப்போதே மோடி அமித்ஷா போன்றவர்கள் வருவார்கள் என நினைத்து மதசார்பற்ற நாடு என அறிவித்தார். அப்படிப்பட்ட தலைவர்கள் தற்போது இல்லாத நிலையில் அந்த வெற்றிடத்தை பூர்த்தி செய்யும் விதமாக முதல்வர் ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்.

பெரியார் புலவர்களைப் பாராட்டும்போது சுயநலத்துடன் தான் பாராட்டு செய்வார். ஏனெனில் அவர்களுடைய பயணம் சுயமரியாதைக்கு பயன்பட வேண்டும் என்பதற்காக பாராட்டு தெரிவிப்பார். முதல்வரிடம் செந்தலை கவுதமன் போன்றவர்களை தட்டிக் கொடுப்பது மட்டுமல்லாமல், அவர்களது சேவையை துரிதப்படுத்தி தமிழகத்திற்கு மென்மேலும் பெற்றுத் தர தான் வலியுறுத்த உள்ளதாகத் தெரிவித்தார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.