முக்கியச் செய்திகள் கட்டுரைகள் தமிழகம் செய்திகள்

அதிமுகவில் இருந்து நிலோபர் கபில் நீக்கப்பட்டது ஏன்?

முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில், திடீரென நீக்கப்பட்டிருக்கிறார், அதிமுகவில் இருந்து. ஏன் இந்த திடீர் நீக்கம்? விசாரித்ததில் விலாவாரியாக சொல்கிறார்கள், ஏராளமான தகவல்களை!

2001 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற ஜெயலலிதா, இரண்டாம் முறையாக தமிழ்நாட்டின் முதல்வரானார். இதையடுத்து நடந்த உள்ளாட்சி தேர்தலில், வாணியம்பாடி நகராட்சி தலைவர் பதவிக்கு அதிமுக கூட்டணியில் இருந்த தேசிய லீக் சார்பில் போட்டியிட்டவர் மருத்துவர் நிலோபர் கபில். பாரம்பரிய மருத்துவக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், எளிதாக வென்றார், நிலோபர். அடுத்த சில ஆண்டுகளிலேயே ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். பிறகு, 2011 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக நகர்மன்ற தலைவரானார்.

2014 -ஆம் ஆண்டு, வழக்கு ஒன்றில் ஜெயலலிதா, சிறைக்கு சென்றபோது, திமுக தலைவர் கருணாநிதியை, நிலோபர் கபில் ஆவேசமாக தாக்கிப் பேசிய பேச்சு, கார்டன் வரை சென்றது. அந்த பேச்சுதான் நிலோபரை, 2016 சட்டப்பேரவை தேர்தலில் வாணியம்பாடி தொகுதி எம்.எல்.ஏவாக்கியது. பிறகு தொழிலாளர் நலத்துறை அமைச்சரானார்.

அப்போதிருந்தே, நிலோபர் கபிலுக்கும், அதே மாவட்டத்தை சேர்ந்த மற்றொரு அமைச்சர் கேசி வீரமணிக்கும் தொடங்கியது பனிப்போர் . 2019 மக்களவை தேர்தல் வந்ததும், நிலோபருக்கு ஆரம்பித்தது, இறங்குமுகம். வேலூர் மக்களவை தொகுதி திமுக வேட்பாளராக, அமைச்சர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட, வாணியம் பாடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஏசி சண்முகத்தை விட கதிர் ஆனந்த், 22000 வாக்குகள் அதிகம் பெற்றார். இது நிலோபருக்கு சிக்கலானது.

வாய்ப்புக்காக காத்திருந்த வீரமணி, அவரால்தான் தோற்றோம் என்பது போல, நிலோபருக்கு எதிராக காய் நகர்த்தத் தொடங்கினார். இறுதியில் மணியான மூன்று அமைச்சர்களின் திட்டத்தால், கட்டம் கட்டப்பட்டார் நிலோபர். பின்னர் நடந்து முடிந்த தேர்தலில் போட்டியிட சீட் மறுக்கப்பட்டது, நிலோபருக்கு.

செய்தியாளர்களிடம் கதறி அழுத நிலோபர், வீரமணிக்கும், துரைமுருகனுக்கும் இடையிலான பாசவலையை பட்டியலிட்டார். இதற்கிடையே, வீரமணியின் உறவினர் செந்தில்குமார் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார். அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றுவிட்டதால், நிலோபர் மீதான புகார்கள் அடங்கி போகும் என எதிர்பார்த்தனர் கட்சியினர்.

ஜோலார்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட வீரமணி , திமுக மாவட்ட செயலாளர் தேவராஜிடம் தோல்வி யடைந்தார். அதற்கு காரணம் நிலோபர் என்றனர். மீண்டும் வீரமணிக்காக, இரு முன்னாள் மணியானவர்கள் ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரிடமும் நிலோபருக்கு எதிரான புகார்களை வாசித்தனர். அதில் ஒன்று அவர், விரைவில் அறிவாலயத்தில் ஐக்கியமாக இருக்கிறார் என்பது!

மற்றொரு புறம் நிலோபர் அமைச்சராக இருந்தபோது, உதவியாளராக இருந்தவர், வீரமணியின் நம்பிக்கைக் குரியவர். அவர் மூலம் வேலை வாய்ப்புகள், இதர அரசுப்பணிகளுக்கு பெற்ற பண பரிமாற்றங்கள் குறித்த தகவலை, நிலோபர் கபிலுக்கு எதிராக புகார் அளிக்க செய்தார்களாம், மணியானவர்கள். இதையடுத்துதான், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார் நிலோபர் கபில், என்கிறார்கள்.

’’அமைச்சர்களாக இருந்த வீரமணியும், நிலோபரும் கடந்த ஐந்தாண்டுகள் விருப்பு, வெறுப்பின்றி செயல்பட்டிருந் தால் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம், பல வகைகளில் பலனடைந்திருக்கும். நிலோபர் கபில் மட்டுமல்ல, கேசி வீரமணிக்கும் கிடைத்த பதவிகள் எல்லாம் திடீரென வந்ததுதான். சொந்த கட்சியிலேயே பலரை வீழ்த்தி இருக்கிறார் வீரமணி. எம்ஜிஆர் காலத்தில் ஒன்றியக் குழுத் தலைவராக இருந்து, ஜெயலலிதா காலத்தில் மாவட்ட செயலாளர், அமைச்சர் என முக்கிய பொறுப்பில் இருந்த கே,பாண்டுரங்கனுக்கு எதிரான அதிருப்தியை சாதகமாக்கி, ஜாக்பாட்டில் அந்த இடத்தைப் பிடித்தவர்தான் இந்த வீரமணி” என்கிறார்கள் உள்ளூர் கட்சிக்காரர்கள்.

மருத்துவர்களுக்கே சவால் விடும் இந்த கொடூர கொரோனா காலத்தில் கூட, அரசியல் ஆட்டம் மட்டும் அடங்காமல் இருப்பது வேடிக்கைத்தான்!

-செய்தி பிரிவு

Advertisement:
SHARE

Related posts

பிரதமர் நாளை சென்னை வர உள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..

Jeba Arul Robinson

நீட் தேர்வு தொடர்பான கருத்துகள் குறித்து ஏ.கே.ராஜன் விளக்கம்!

Jeba Arul Robinson

செவ்வாய் கிரகத்தில் பறந்த ஹெலிகாப்டர்!

எல்.ரேணுகாதேவி