அரசியலில் இருந்து ஒதுங்கியது ஏன்? சசிகலா விளக்கம்!

அரசியலில் இருந்து ஒதுங்கியது ஏன் என்பது குறித்து சசிகலா விளக்கம் அளித்துள்ளார்.  சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை முடிந்து சிறையிலிருந்து கடந்த பிப்ரவரி மாதம் வெளியே வந்த சசிகலா அந்த சமயத்தில் தான் தீவிர அரசியலில்…

அரசியலில் இருந்து ஒதுங்கியது ஏன் என்பது குறித்து சசிகலா விளக்கம் அளித்துள்ளார்.

 சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை முடிந்து சிறையிலிருந்து கடந்த பிப்ரவரி மாதம் வெளியே வந்த சசிகலா அந்த சமயத்தில் தான் தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாகத் தெரிவித்தார். எனினும், அடுத்த சில வாரங்களில் மார்ச் 3ஆம் தேதி அறிக்கை வெளியிட்டவர், அரசியலில் இருந்து தான் ஒதுங்கியிருப்பதாகவும், ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய எல்லாம் வல்ல இறைவனிடமும் பிரார்த்தனை செய்து கொண்டே இருப்பேன் என்றும் குறிப்பிட்டார்.

எனினும் சட்டமன்றத் தேர்தலில் 66 இடங்களைப் பெற்ற அதிமுக ஆட்சியை இழந்து எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது. இதனிடையே அண்மைக் காலமாக சசிகலா தொண்டர்களும் பேசும் ஆடியோ தொடர்ந்து வெளியாகி வருகிறது. அதில், தான் மீண்டும் அரசியலுக்கு வருவதாக பேசிவருகிறார். நேற்று நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சசிகலாவுடன் பேசிய முன்னாள் அமைச்சர் ஆனந்தன் உள்ளிட்ட 15 பேர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். 

இந்த நிலையில் சசிகலா தொண்டர்களுடன் பேசும் இன்னுமொரு ஆடியோ இன்று வெளியாகியுள்ளது. அதில், இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு வளர்த்த கட்சி வீணாவதை என்னால் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது என்று கூறியுள்ளார். தொடர்ந்து,  “வெற்றிபெறுவோம் என்று சொன்னதால்தான் நான் ஒதுங்கி இருந்தேன். தொண்டர்கள் தங்களுடைய மனக்குமுறலை என்னிடம் கொட்டும்போது எப்படி பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியும். அதனால் நான் வருகிறேன், உங்களை சந்திக்கிறேன் என்று சொல்லிவிட்டேன்” என்று கூறிய  சசிகலா, ஒருசிலரின் சுயநலத்துக்காக தொண்டர்களை பலிகடா ஆக்குவதா? இது கட்சியை வழிநடத்துபவர்களுக்கு அழகா?என்ற கேள்வியை முன்வைத்தார். 

மேலும், “முதுகில் குத்தி குத்தி, குத்த இடமே இல்லாத அளவுக்கு முதுகில் குத்திவிட்டனர். ஆனால், தொண்டர்களுக்கு ஒன்று என்னும்போது என்னால் எப்படி பார்த்துக்கொண்டு இருக்க முடியும்” என்பதாக முடிகிறது அந்த ஆடியோ. 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.