முக்கியச் செய்திகள் கட்டுரைகள் தமிழகம் செய்திகள்

ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டி?: ஓபிஎஸ் அறிவிப்புக்கான காரணங்கள் இவைதானா?


எஸ்.இலட்சுமணன்

கட்டுரையாளர்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் தமது அணி போட்டியிடும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இபிஎஸ் அணி வலுவாக உள்ளதாக கருதப்படும் கொங்கு மண்டலத்தில் ஓபிஎஸ் அணி போட்டியிட முடிவெடுத்திருப்பதன் பின்னணி என்ன?

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒரு முன்னோட்டம் போல தமிழ்நாடு அரசியல் களத்தில் அனலை அதிகரித்துள்ளது. இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதையெல்லாம் தாண்டி அதிமுக உட்கட்சி பிரச்சனையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் என்ன  மாற்றங்களை கொண்டுவரப்போகிறது என்பதுதான் அதிக பேசு பொருளாகியுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் தமிழ்நாட்டை சுமார் 30 வருடங்களாக ஆண்ட அதிமுகவின் உட்கட்சி பிரச்சனையில் இரண்டுவிதங்களில் தீர்வை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. இந்த தேர்தல் முடிவதற்குள் அக்கட்சியில் உள்ள அணிகள் ஒன்றுபட்டு தீர்வு ஏற்படலாம், அல்லது அந்த அணிகளில் ஏதாவது ஒன்றின் பலம் நிரூபிக்கப்பட்டு அதுதான் உண்மையான அதிமுக என்பது நிரூபணம் ஆகலாம். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, தேர்தல் ஆணையத்தின் முடிவு ஆகியவையே அதிமுக உட்கட்சி பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் முக்கிய அம்சமாக இருக்கும் என்றாலும், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் இந்த விவகாரம் ஒரு தீர்வை நோக்கிச் செல்வதற்கு பாதை அமைத்துக்கொடுக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

இந்நிலையில் அதிமுகவில் உள்ள இபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா அணிகள் மற்றும் அக்கட்சியிலிருந்து பிரிந்துசென்று தனிக்கட்சி நடத்தி வரும் டிடிவி தினகரன் ஆகியோர் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலை எப்படி எதிர்கொள்ளப்போகிறார்கள் என்பது அதிகம் உற்றுநோக்கப்படுகிறது. கடந்த 2021ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் இந்த தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட தமாகாவிடம் பேசி அவர்களின் சம்மதத்தை பெற்றுள்ள இபிஎஸ் அணி,  அதிமுக சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் களம் இறங்க தயாராகி வருகிறது.

அதே நேரம் இடைத்தேர்தலில் தாங்களும் களம் இறங்க போவதாக ஓபிஎஸ் அணி அறிவித்துள்ளது. கடந்த 20ந்தேதி தமது அணியின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்து ஆலோசனை நடத்திய முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ், 21ந்தேதி காலை செய்தியாளர்களை சந்திக்கும்போது இந்த அறிவிப்பை வெளியிட்டார். அதே நேரம் பாஜக ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்தால் அந்த விருப்பத்தை ஏற்று போட்டியிலிருந்து விலகி பாஜகவுக்கு ஆதரவு அளிப்போம் என ஓபிஎஸ் தெரிவித்தார். எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பதற்கு முன்பு தேசிய கட்சியான பாஜகவிற்கு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் நல்வாய்ப்பாக அமையும் என்கிற அடிப்படையில் அக்கட்சிக்கு ஆதரவு அளிக்க தயார் என்று ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்தார்.

வேட்புமனுதாக்கல் தொடங்கிய பின்னர் தமாகா என்கிற புதிய கட்சி உருவாகி அக்கட்சியுடன்  கூட்டணி அமைத்து தொகுதி பங்கீடு செய்து, சட்டப்பேரவை தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெற்ற நிகழ்வையெல்லாம் கடந்த காலங்களில் தமிழக அரசியல் களம் சந்தித்திருக்கிறது. அப்படியிருக்கையில் வேட்பு மனுதாக்கல் தொடங்கவே இன்னும் 10 நாட்கள் உள்ள நிலையில், பாஜகவிற்கு ஆதரவு அளிக்கும் மன நிலையில் உள்ள ஓபிஎஸ், அந்த கட்சி தனது முடிவை அறிவிக்கும் முன்பே ஈரோடு கிழக்கு தொகுதியில் தாங்கள் போட்டியிடுவோம் என அவசர அவசரமாக அறிவித்திருப்பதின் பின்னணி என்ன என்கிற கேள்வி எழுந்துள்ளது.

இடைத் தேர்தலில்  இபிஎஸ் அணிக்கு பாஜக ஆதரவு அளிக்கும் மன நிலையில் உள்ளதை உணர்ந்து இந்த முடிவை ஓபிஎஸ் அறிவித்தாரா? அல்லது பாஜக ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவதற்கும்,  அதற்கு தாங்கள் ஆதரவு அளிப்பதற்கும் நிறைய வாய்ப்புகள் உள்ள சூழலில் அதற்கு முன்பாக இபிஎஸ் தரப்பிற்கு நெருக்கடி கொடுக்கவும், போட்டியில் களம் இறங்க தாங்கள் தயங்கவில்லை என்பதை காட்டுவதற்காகவும் இடைத்தேர்தலில் போட்டி என்கிற அறிவிப்பை தற்காலிகமாக ஓபிஎஸ்  வெளியிட்டாரா என்ற கேள்விகளும் எழுகின்றன. மேலும் கூட்டணி கட்சிகள் பேச்சுவார்த்தைக்கு இபிஎஸ் பக்கம் சென்றால் அவர்தான் உண்மையான அதிமுக என்கிற தோற்றம் உருவாகும் என்றதால் அதனை தடுக்கவே ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் முடிவை ஓபிஎஸ் அறிவித்தாரா என்கிற பார்வையிம் அரசியல் களத்தில் முன்வைக்கப்படுகிறது.

இந்த யூகங்கள் ஒருபுறம் இருந்தாலும், ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டி என்கிற அறிவிப்போடு நின்றுவிடாமல் அடுத்த  சில மணி நேரங்களிலேயே கூட்டணி கட்சி தலைவர்களான தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோரை தானே நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி சுறுசுறுப்பு காட்டி வருகிறார் ஓபிஎஸ்.   வரும் இடைத் தேர்தலில் ஓபிஎஸ் அணி களம் இறங்குவது வெற்றிதோல்வியை தாண்டி அந்த அணிக்கு ஒருவிதத்தில் அவசியமாகிறது. எம்.எல்.ஏக்கள் ஆதரவு, கட்சி அலுவலகம், கட்சியின் வங்கிக் கணக்குகளை கையாள்வது என பல்வேறு விஷயங்களில் பின்னடைவை சந்தித்தபோதிலும், அதிமுகவிற்கு உரிமைகோரும் விவகாரத்தில் சளிப்படையாமல் தொடர் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். இந்த முயற்சிகளுக்கு வெற்றி கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் கட்சியை உரிமை கோரும் விஷயத்தில் இபிஎஸ் அணியின் ஒவ்வொரு அசைவுகளுக்கு எதிராகவும் ஓபிஎஸ் தனது போட்டியை கொடுத்து வருகிறார். அந்த வகையில்,  எதிர் வரும் இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுக்கவும், தாம் ஒதுங்கியிருந்தால் அதிமுகவிற்கு உரிமை கோரும் முயற்சியை கைவிட்டுவிட்டார் என்கிற பேச்சுக்கள் எழுவதை தடுக்கவும் ஈரோடு கிழக்கு தொகுதியில் தமது அணி சார்பில் வேட்பாளரை களம் இறக்கும் முடிவுக்கு ஓபிஎஸ் வந்திருக்கலாம் என்கிற கோணத்திலும் கருத்துக்கள் நிலவி வருகின்றன.

அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியில் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தில் கூறிவிட்ட நிலையில் தற்போது ஓ.பன்னீர்செல்வம்தான் இரட்டை இலைக்கு சொந்தக்காரர் என அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும்போதுதான் தேர்தல் ஆணையத்திடம் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க உரிமைகோர முடியும் என்பதாலும் இந்த இடைத்தேர்தலில் களம் இறங்குவது ஓபிஎஸ் அணிக்கு அவசியமாக உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

இன்றைய செய்தியாளர் சந்திப்பில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் தங்கள் அணி போட்டியிடும் என ஓபிஎஸ் அறிவித்தாலும்,  ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு எனக் கூறி அதிமுக ஒன்றுபடுவதற்காக இபிஎஸ் அணிக்கு  அழைப்பு விடுக்கவும் அவர் தவறவில்லை. அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம்  ஒதுக்குவதற்கான ஏ பார்மிலும், பி பார்மிலும் தாம் கையெழுத்துப்போடத் தயார் என்றும் ஓபிஎஸ் தெரிவித்தார். இபிஎஸ் தம்முடன் இணைந்து கையெழுத்துப்போடத் தயாரா என்று மறைமுகமாக கேள்வி எழுப்புவது போலவும் அவர் பதில் அமைந்திருந்தது. இந்த சூழலில் வேட்பு மனு தாக்கல் தொடங்க இன்னும் 10 நாட்கள் உள்ள சூழலில் அதிமுகவை சுற்றி அடுத்தடுத்து என்னென்ன திருப்பங்கள் நிகழப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

-எஸ்.இலட்சுமணன்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஆரஞ்சு கேப்-ஐ கைப்பற்றினார் ருதுராஜ்

Halley Karthik

செஸ் ஒலிம்பியாட் – ஒருங்கிணைப்பு குழு அமைத்து உத்தரவு

Janani

மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை கோரி முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம்

Halley Karthik