இந்தியா-வளைகுடா நாடுகள்: நல்லுறவு அவசியம் ஏன்?

இந்தியாவிற்கும் வளைகுடா நாடுகளுக்குமிடையேயான உறவு ஒன்றுடன் ஒன்று பின்னி பிணைந்தது. இந்த உறவில் ஏற்படும் விரிசலானது இரு தரப்பிற்கும் இடையே வர்த்தக ரீதியிலான பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக இந்தியாவிற்கு, வளைகுடா நாடுகளின் உறவு…

இந்தியாவிற்கும் வளைகுடா நாடுகளுக்குமிடையேயான உறவு ஒன்றுடன் ஒன்று பின்னி பிணைந்தது. இந்த உறவில் ஏற்படும் விரிசலானது இரு தரப்பிற்கும் இடையே வர்த்தக ரீதியிலான பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக இந்தியாவிற்கு, வளைகுடா நாடுகளின் உறவு மிகவும் அவசியமானது கருதப்படுகிறது.

வளைகுடா நாடுகளில் இந்தியர்கள் பெருமளவில் வசித்து வருகின்றனர். குறிப்பாக ஐக்கிய அரபு அமீரக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு இந்தியர்களே. மொத்தமாக வளைகுடா நாடுகளில் 89 லட்சம் இந்தியர்கள் வாழ்ந்து வருகின்றனர். அங்கு வாழும் இந்தியர்கள் பெரிய தொழில் நிறுவனங்களையும், உணவகங்ளையும் நடத்தி வருகின்றனர். இந்த சூழலில் வளைகுடா நாடுகளுக்கிடையேயான உறவில் ஏற்படும் விரிசல், இவர்களது தொழிலில் பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள், இந்தியாவிற்கு பணம் அனுப்புவது வழக்கமான ஒன்று. இந்த வகையில் ஆண்டுதோறும் 6 லட்சம் கோடி ருபாய் அளவிற்கு பணம் இந்தியாவிற்குள் வருகிறது. இந்த தொகையில் 50 சதவீதத்திற்கு மேல் வளைகுடா நாடுகளில் இருந்து மட்டுமே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா தமக்கான கச்சா எண்ணெய் தேவையில், பெருமளவு வளைகுடா நாடுகளையே சார்ந்துள்ளது. இந்தியாவின் ஒரு நாளுக்கான பெட்ரோலிய பொருட்களின் தேவையில், 60 சதவீதம் வளைகுடா நாடுகளில் இருந்தே பெறப்படுகிறது. குறிப்பாக ஈராக், சவூதி, ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து மட்டுமே 50 சதவீத பெட்ரோலிய பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தியா போன்ற பெட்ரோலிய பொருட்களை சார்ந்து இயங்கும் நாடு, வளைகுடா நாடுகளுடனான தனது உறவை சுமுகமாக வைத்திருப்பது அவசியமாகிறது என்பதே வல்லுனர்களின் கருத்தாக உள்ளது.

வளைகுடா நாடுகளுக்கும் இந்தியாவின் உறவு தேவையாகவே உள்ளது. 2021- 22ல் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இந்தியாவிற்கும் இடையேயான வர்த்தக மதிப்பு 5 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருந்துள்ளது. 2026ம் ஆண்டிற்குள் 7 லட்சம் கோடி அளவிற்கு வர்த்தகம் உயரும் என்ற எதிர்பார்த்து கொண்டிருக்கும் வேளையில், இரு நாடுகளுக்குமிடையேயான உறவில் ஏற்படும் விரிசல் அனைவருக்கும் பாதகமாகவே அமையும் என்பது பொருளாதார வல்லுனர்களின் கருத்தாக உள்ளது.

வளைகுடா நாடுகள், தங்களது உணவு பொருள் தேவையில் 85 சதவீதத்தை இறக்குமதி செய்கின்றன. அதில் இந்தியாவில் இருந்துதான் பெரும்பாலான உணவு பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகிறது. குறிப்பாக அரிசி, மாட்டிறைச்சி, மசாலா பொருட்கள்,பழங்கள்,காய்கறிகள்,சர்க்கரை போன்ற பொருட்கள் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. இவ்வாறு வளைகுடா நாடுகளும் இந்தியாவும், வர்த்தகம் மற்றும் பிற விஷயங்களில் இணைந்து செயல்படும் வேளையில், சுமுகமான உறவு இரு நாடுகளுக்கும் தேவையான ஒன்றாகவே உள்ளது.

– சந்தோஷ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.