ஆம் ஆத்மி கட்சியின் சமூக ஊடக கணக்குகள் மீதான முடக்கத்தை உடனடியாக நீக்க வேண்டும் – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

ஆம் ஆத்மி கட்சியின் குஜராத் மாநிலப் பிரிவின் முடக்கப்பட்ட அதிகாரப்பூர்வ பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளின் முடக்கத்தை உடனடியாக நீக்க வேண்டுமென்று மெட்டா நிறுவனத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாத இறுதியில் குஜராத் உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறுவதற்குச் சில நாட்களுக்கு முன்பாக, ஆம் ஆத்மி கட்சியின் குஜராத் மாநிலப் பிரிவின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் திடீரென முடக்கப்பட்டன. தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் அரசும், காவல் துறையும் அளித்த தகவலின் பேரில் கணக்குகள் முடக்கப்பட்டதாக மெட்டா நிறுவனம் விளக்கமளித்திருந்தது.

இருப்பினும், கணக்குகளை முடக்குவதற்கான எந்தவொரு முறையான காரணமும் அல்லது முன்னறிவிப்பும் தங்களுக்கு வழங்கப்படவில்லை எனக்கூறி ஆம் ஆத்மி கட்சி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கு நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, அலோக் ஆராதே ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆம் ஆத்மி கட்சி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷாதன் ஃபராஷத், குறிப்பிட்ட ஏதேனும் தவறான பதிவை நீக்குவதற்குப் பதிலாக, ஒரு தேசியக் கட்சியின் முழு சமூக வலைதளத்தை முடக்குவது அரசியலமைப்பு வழங்கியுள்ள கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது என சுட்டிக்காட்டினார். மேலும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தான் ஆம் ஆத்மி சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டினர்
அதேவேளையில் மத்திய அரசு தரப்பில், இந்த வழக்கை வரும் புதன்கிழமைக்கு ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

அதற்கு நீதிபதிகள், இந்த வழக்கை எத்தனை முறை ஒத்திவைக்க கோருவீர்கள் என மத்திய அரசு தரப்பிடம் அதிருப்தி தெரிவித்தனர். இதனையடுத்து உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், ஆட்சேபனைக்குரிய உள்ளடக்கங்கள் இருந்தால் அதனை நீக்கி விட்டு ஆம் ஆத்மி கட்சியின் குஜராத் மாநில சமூக வலைதளக் கணக்குகளை மீதான முடக்கத்தை உடனடியாக நீக்குமாறு மெட்டா நிறுவனத்திற்கு உத்தரவிட்டு, வழக்கு மீதான விசாரணையை இரண்டு வார காலத்துக்கு ஒத்திவைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.