நாடாளுமன்றத்தின் மக்களவையில் நேற்று மாலை நடைபெற்ற கூட்டத்தில் விலைவாசி உயர்வு குறித்து விவாதம் நடைபெற்றது. அப்போது, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விலைவாசி உயர்வு குறித்தும் ஜிஎஸ்டி குறித்தும் விளக்கம் அளித்தார்.
தமிழகத்தில் ஆளும் திமுக தலைமையிலான அரசையும் சாடி பேசினார். அதைத் தொடர்ந்து திமுக, விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் மக்களவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுதொடர்பாக டுவிட்டரில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள பதிவுகளில் கூறப்பட்டுள்ளதாவது:
விலைவாசி உயர்வு குறித்து மக்களவையில் விவாதம் நடைபெற்றது. நிறைவாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் விடையளித்துப் பேசியபோது தமிழ்நாடு அரசை விமர்சித்தார்.
வாக்குவாதம் வலுத்தது. அமைச்சரின் விடை திசை திருப்புவதாக இருந்ததால் திமுக, விசிக, இடதுசாரிகள், திரிணமூல் ஆகிய கட்சிகள் கண்டனம் தெரிவித்து வெளிநடப்பு செய்தோம்.
அதற்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியும் அமைச்சரின் விடை ஏற்புடையதாக இல்லையென வெளிநடப்பு செய்தது. அமைச்சரின் பேச்சு எதிர்க்கட்சிகளை அவமதிக்கும் வகையிலான அகந்தை போக்காக உள்ளதென திரிணமூல் கண்டித்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது என்று அந்தப் பதிவுகளில் திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, “தமிழகத்தில் திமுக அரசு ஊடகங்களிடமும் மக்களிடமும் பொய்களைப் பரப்புவது போல் பாராளுமன்றத்திலும் முயற்சி செய்தனர். நமது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், திமுகவின் மக்கள் விரோத போக்கையும், இரட்டை நிலைப்பாட்டையும் வெளிச்சம் போட்டுக் காட்டி விட்டார்” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டுவிட்டரில் குறிப்பிட்டிருந்தார்.