முக்கியச் செய்திகள் கட்டுரைகள்

இந்தி பேசும் மாநிலங்கள் சீர்திருத்த தலைவர்களை ஏன் உருவாக்கவில்லை?


மரிய ரீகன் சாமிக்கண்ணு

ந்தியா சாதியால் கட்டமைக்கப்பட்டுள்ளது. இங்கு இருக்கும் ஏற்ற தாழ்வுகளுக்கும் சமூக முரண்பாடுகளுக்கும் இந்தியா தனது வரலாற்றை சாதியின் மீது கட்டமைத்ததே காரணம் என பல ஆய்வாளர்கள் தங்களின் ஆய்வு முடிவுகள் மூலமாக நிரூபித்துக் காட்டியுள்ளனர். இந்த சாதிய அடுக்குகளை உடைப்பதற்கு சில தலைவர்கள் மட்டும் தான் இந்தியாவின் மாநிலங்களில் தோன்றியுள்ளனர். இந்தியாவில் சாதிய முரண்பாட்டிற்கும், சாதி ஒழிப்பிற்கும் எதிராக குரல் கொடுத்தவர்களில் தந்தை பெரியார், பி.ஆர். அம்பேத்கர், ஜோதிராவ் பூலே போன்றோர் முதன்மையானவர்களாக இருக்கிறார்கள். இந்தியாவின் அகண்ட நிலப்பரப்பில் சாதி ஒழிப்புக்கு எதிரான குரல்கள் எந்தெந்த மாநிலத்தில் இருந்து எழுந்தது என்று பார்த்தாலே புரியும். அதாவது, ஜோதிராவ் பூலே, பி.ஆர். அம்பேத்கர், தந்தை பெரியார், சி.நடேச முதலியார், தியாகராய செட்டி, டி.எம். நாயர், கோலாப்பூரின் ஷாஹுஜி மகாராஜ், காட்கே பாபா, பண்டிதா ரமாபாய், கேசவ்ராவ் ஜெதே, சாவித்ரிபாய் ஃபுலே, கிருஷ்ணராவ் பாலேகர் உள்ளிட்ட பலர் சாதி மேலாதிக்கத்திற்கு சவால் விடுத்து இந்திய சமூகக் கட்டமைப்புகளில் புரட்சியை ஏற்படுத்த பாடுபட்டனர்.

இந்த பட்டியலில் ஒரு சுவாரஸ்யமான வரலாற்று உண்மை பொதிந்து கிடக்கிறது. பட்டியலில் இருக்கும் அனைவருமே, அப்போதைய மதராஸ் மாகாணம் மற்றும் பம்பாய் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். சாதிக்கு எதிராகவும், சமூக ஏற்றத்தாழ்வு, பெண் அடிமைத்தனத்திற்கு எதிராகவும் இந்தியாவில் மதராஸ் மாகாணம், பம்பாய் மாகாணம் மட்டும் ஏன் பேசியது?. அதே சமயத்தில், கொல்கத்தா மற்றும் இந்தி பேசும் மாகாணங்கள் சாதி ஒழிப்பு தலைவர்களை, சமூக சீர்திருத்தவாதிகளை ஏன் உருவாக்கத் தவறிவிட்டன என்பதை பற்றிய விவாதத்தை முன்னெடுக்க வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது.
ராம் மோகன் ராய் மற்றும் ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் போன்றோர் சீர்திருத்த தலைவர்களாக மதிப்பிட்டு கூறலாம். இவர்கள் ஏற்படுத்திய வங்காள மறுமலர்ச்சி இந்துக்களிடையே நிலவும் ஜாதி மற்றும் பிறப்பு அடிப்படையிலான பாகுபாடுகளுக்கு தீர்வு காணத் தவறிவிட்டது என்பதை நாம் கவனிக்க வேண்டி இருக்கிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

வங்காளம், இந்தி பேசும் மாநிலம் சீர்திருத்த தலைவர்களை ஏன் உருவாக்கவில்லை?:

ஜோதிபா ஃபுலே 1873 இல் புனேவில் சத்தியசோதக் சமாஜை (உண்மை தேடுவோர் சங்கம்) உருவாக்கினார். 1902 ஆம் ஆண்டில், பம்பாய் மாகாணத்தில் உள்ள கோலாப்பூர் இந்தியாவில் முதன்முறையாக பார்ப்பனர் அல்லாத சாதியினருக்கான வேலைகளில் இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தினார். 1916 ஆம் ஆண்டில், மதராஸ் மாகாணத்தில் நீதிக்கட்சி உருவாக்கப்பட்டது, 1921 ஆம் ஆண்டில், நீதிக்கட்சி தலைமையிலான மாகாண அரசாங்கம் அரசு வேலைகளில் பார்ப்பனர் அல்லாதவர்களுக்கு இடஒதுக்கீடு செய்வதற்கான வகுப்புவாத அரசாங்க ஆணையை அறிமுகப்படுத்தியது.

மதராஸ் மற்றும் பம்பாய் மாகாணங்களில் நடந்த இந்த இரண்டு வரலாற்று நிகழ்வுகள் தென் இந்தியா மற்றும் மேற்கு இந்தியாவில் மிகப்பெரிய சமூக சீர்த்திருத்தத்திற்கும் பார்ப்பனர் அல்லாதவர்களுக்கான எழுச்சிக்கும் வித்திட்டது. இது போன்ற ஒரு சமூக சீர்திருத்தம் வங்கத்திலும் இந்தி பேசும் மாகாணங்களிலும் நடக்காமல் போனது ஏன்?

அமெரிக்க சமூகவியல் மாணவர் கெயில் ஓம்வெட், ( காலனித்துவ சமூகத்தில் கலாச்சாரக் கிளர்ச்சி: மேற்கு இந்தியாவில் பிராமணரல்லாத இயக்கம் (1873 முதல் 1930 வரை) என்ற தலைப்பில் ஆய்வு நிகழ்த்தியவர். ) இதே போல், இந்தியா டுடே இந்தி இதழின் முன்னாள் நிர்வாக ஆசிரியர் திலீப் மண்டல் ஆகியோர் மூன்று காரணிகளை குறிப்பிடுகிறார்கள்.

1) வட இந்தியாவில், பிராமணர்கள் மற்றும் பிற ஆதிக்க சாதியினரின் மக்கள் தொகை ஒப்பீட்டளவில் அதிகமாக இருந்தனர். எனவே, தாழ்த்தப்பட்ட சாதியினர், தங்கள் மீதான ஒடுக்குமுறைகளை ஏவும் இந்து சமூக அமைப்புக்கு எதிராக குரல் எழுப்புவது முடியாத ஒன்றாக இருந்தது.

2) பக்தி இயக்கத்தின் காரணமாகவும், வங்காள ‘பத்ரலோக்’ சாதிகளின் அறிவொளியின் காரணமாகவும், வடக்கில் சாதிய ஒடுக்குமுறைகள் பட்டவர்த்தனமாக இல்லை.

3) தென்னிந்தியாவில், இந்து சமூக அமைப்பு படிநிலையில் இருந்தது/இருக்கிறது. இதில், பார்ப்பனர்கள் மேலேயும், சூத்திரர்கள்/ஆதி-சூத்திரர்கள் கீழேயும் உள்ளனர். அதேசமயம், வடக்கு மற்றும் வங்காள சமூகப் படிநிலையில், சத்திரியர்கள், பூமிஹார்கள், வைசியர்கள், காயஸ்தர்கள் போன்ற பிற உயர் சாதியினர் இடைநிலை இருந்தனர்.

பார்ப்பனர்கள் அல்லாத நடுத்தர வர்க்கம் உருவாக்கம்:

மதராஸ் மாகாணம், பம்பாய் மாகாணம் ஆகிய நிலப்பகுதியில் சீர்திருத்த தலைவர்கள் முக்கியமாக தோன்றியதற்கு காரணமாக மற்றொரு அம்சத்தை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. அதாவது, ஆங்கிலேய காலனிய ஆட்சியின் போது இந்த இரண்டு மாகாணங்களிலும் ரயத்வாரி முறை நடைமுறையில் இருந்தது. (ரயத்வாரி முறை என்பது ஐரோப்பியர்கள் நிலத்தைப் பயிரிடுபரிடம் நேரடியாக வரி வசூல் செய்தனர் “ரயத்து” என்ற சொல்லுக்கு “உழவர்” என்று பொருள். பயிரிடுபவர்களிடம் வரி வசூல் செய்து அரசுக்குச் செலுத்தும் இடைத்தரகர்கள் இம்முறையில் இருக்கவில்லை.) இந்த ரயத்வாரி முறை பார்ப்பனர்கள் அல்லாத இடைசாதியினரின் வளர்ச்சிக்கு உதவியது. வங்காளம் மற்றும் பீகாரில் இங்கிலாந்தைச் சேர்ந்த காலனியவாதிகள் நிரந்தர குடியேற்ற திட்டத்தை 1793 ஆம் ஆண்டில் செயல்படுத்தினர். இந்த மாகாணங்களில் ஜமீன்தாரி முறை (ஜமீன்தாரி முறை என்பது பயிரிடுபவர்களிடமிருந்து வரி வசூல் செய்த ஜமீன்தார்கள் அதில் ஒரு பகுதியை தாங்கள் வைத்துக்கொண்டு மீதியை ஐரோப்பிய காலனிக்கு கப்பமாக கட்டினர். அரசுக்கும் பயிரிடுபவர்களுக்கும் இடையே இடைத்தரகராக இந்த ஜமீன்தார்கள் செயல்பட்டனர்.) உயரடுக்கினருக்கு ஒதுக்கப்பட்டது. இந்த ஜமீன்தார்கள் இங்கிலாந்து காலனியர்கள் காலத்தில், இடைத்தரகர்களாக செயல்பட்டு நில வருவாயை சேகரித்தனர். இந்த நடைமுறையால், விவசாயிகளுக்கு நில உரிமை அளிக்கப்படவில்லை.

மதராஸ், பம்பாய் மாகாணங்களில் பார்ப்பனர் அல்லாத நடுத்தர வர்க்கம் ஒன்று தோன்றியது. இது தான், பிற்காலத்தில், சாதிய எதிர்ப்பு இயக்கத்தின் உருவாக்கத்திற்கு காரணமாக அமைந்தது. இது போன்ற முறை இல்லாததால், வங்காளம் மற்றும் இந்தி பேசும் வட இந்திய மாநிலங்களில் பார்ப்பனர் அல்லாத நடுத்தர வர்க்கம் தோன்றாமல் போனது. இந்தி பேசும் மாநிலங்கள் மற்றும் வங்காளத்தில் பார்ப்பனர் அல்லாத நடுத்தர வர்க்கம் தோன்ற ஜமீன்தாரி முறை ஒரு காரணமாக அமைந்தது. மதராஸ் மற்றும் பம்பாய் மாகாணங்களில், சாதி எதிர்ப்பு தலைவர்கள் பெரும்பாலும் நடுத்தர வர்க்க விவசாயிகளாக இருந்தனர். மேலும், சிலர் அரசினுடைய ஒப்பந்ததாரர்களாகவும் இருந்தனர். அம்பேத்கர் மட்டும் விதி விலக்கு. அதே சமயத்தில், அம்பேத்கரின் தந்தை இங்கிலாந்து காலனியத்தில் ராணுவ சுபேதராகவும் இருந்தார்.

ஐரோப்பிய கல்வி ஏற்படுத்திய தாக்கம்:

மற்றொரு விஷயம், பம்பாய், மதராஸ் மாகாரணங்களில் ஐரோப்பிய காலனியக்காரர்கள் கல்வியில் மிகப்பெரிய சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தனர். அதாவது, இந்த மாகாணங்களில் இருந்த பழமையான கல்வி முறைக்கு மாற்றாக புதிய கல்வி முறையை அமல்படுத்தினர். சீகன்பால்க், கரூண்ட்லர், சூல்ட்ஷே, ரைனஸ் போன்றோர் தமிழ்க் கல்வி கற்கத் துவங்கியதுடன், தாம் தெரிந்துகொண்டவற்றை மதராஸ் மாகாணத்தில் கற்பிப்பதற்கும், கிறிஸ்தவ மதப்பரப்புதலுக்கும் பயன்படுத்தினர். மேலும், தமிழ் அரிச்சுவடி, சொற்களஞ்சியங்கள், இலக்கண நூல்கள், மக்களின் சமூக வாழ்வியல் குறித்த செய்திகள் என நூல்களாகத் தொகுக்கத் தொடங்கினர்.

18 ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் கிறிஸ்தவ அமைப்புகள் மேற்கொண்ட கல்விப் பணி மதராஸ் மாகாணத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. மாணவர்களுக்கு தமிழ்க்கல்வியுடன், சமயக்கல்வியும், டேனிஷ், போர்த்துக்கீசிய மொழியும் கூட கற்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாகக் கல்வி மறுக்கப்பட்டிருந்த ஒடுக்கப்பட மக்களுக்கும் கல்வி வழங்குவதில் அக்கறை காட்டினர் ஐரோப்பிய பாதிரிமார்கள். ஆண்களும் பெண்களும் இணைந்து படிக்கக்கூடிய பள்ளிகளும், தங்கும் விடுதிகளுடன் கூடிய பள்ளிகளும், மாணவர்களுக்கு இலவச உணவு, உடை மருத்துவ உதவிகள் வழங்கும் வகையில் கிறிஸ்தவ அமைப்புகள் கல்வி கட்டமைப்பை உருவாக்கியது.
மதராஸ் மாகாணம் பம்பாய் மாகாணம் கல்வியில் ஏற்ற நிலை அடைந்ததை அடுத்து உரிமைகளுக்கான குரல்களை உயர்த்தியது. அதன் தொடர்ச்சியாக மூட நம்பிக்கைகள் ஒழிப்பு, பெண்கள் உரிமை மீட்பு என கல்வியால் பெற்ற அறிவுதளத்தை பகுத்தறிவாக மாற்றினர். ஆனால்,

உயர்சாதி இந்துக்களை சீர்திருத்துவதற்கான ஒரு திட்டமாக மட்டுமே வங்காளிகளின் கல்வி சுருங்கிவிட்டது. கல்வியை உலகளாவியமயமாக்குதல், விவசாயிகளின் நிலையை மேம்படுத்துதல், அனைத்து பெண்களுக்கும் கல்வி கற்பித்தல் மற்றும் மூடநம்பிக்கைகளை ஒழித்தல் ஆகியவை வங்காளிகளின் நிகழ்ச்சி நிரலாக மாறவில்லை. இதுபோன்ற கல்விச் சீர்திருத்தம் வங்காளத்திலும் இந்தி பேசும் வட இந்திய பகுதிகளிலும் நடக்காததால் அங்கு சீர்திருத்த தலைவர்கள் உருவாக முடியாமல் போனது.\

ஆங்கிலக் கல்வியை மேல்தட்டு இந்துக்களுக்கு மட்டுமே வழங்கும் கொள்கை இங்கு நடைமுறையில் இருந்ததால், இப்பகுதியில் உள்ள நடுத்தர மற்றும் கீழ் சாதி விவசாயிகள் சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் போன்ற நவீனத்துவம் பற்றிய ஐரோப்பிய சிந்தனைகளைக் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், பம்பாய், மதராஸ் மாகாணங்கள் கண்ட சமூகவியல், அரசியல் சீர்திருத்தங்களும் சமூக மாற்றங்களும் வங்காளத்திலும் வட இந்திய மாகாணங்களிலும் ஏற்படாமல் போனது.

கடந்த சில நூற்றாண்டுகளாக இந்தியாவில் ஏற்பட்ட இந்த ஒட்டுமொத்த கருத்தியல் மாற்றம் இருவேறு பிளவுகளை அரசியல் தளத்தில் ஏற்படுத்தி உள்ளது. தென் இந்திய மாநிலங்கள் குறிப்பிட்ட அளவில் அரசியல் அறிவும் பொருளாதார சுதந்திரமும் அடைந்ததற்கு இந்த பின்னணியை முக்கியமாக கருத வேண்டும். அதே சமயத்தில், வட இந்திய மாநிலங்கள் அரசியல் விழிப்புணர்வு ஒடுக்கப்படுபவர்களின் உரிமைக்குரல்களை முன் வைக்கும் கொள்கைகளின் பால் தலைவர்கள் பின் திரண்டவர்கள் அந்த தலைவரை ஏற்றனர். அதனால், தான் இந்தி பேசாத மாநிலங்கள் தலைவர்கள் நூற்றாண்டு கடந்து முன் நிற்கின்றனர்.

  • நன்றி
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமிழகத்தில் அடுத்த 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

G SaravanaKumar

களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் தீ விபத்து

பிரபல பாலிவுட் நடிகையின் கணவர் ஆபாச பட வழக்கில் கைது

Vandhana