நடிகர் விமல் 5 கோடி ரூபாய் ஏமாற்றிவிட்டதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பட தயாரிப்பாளர் கோபி என்பவர் புகார் அளித்துள்ளார்.
சென்னை பெரவள்ளூர் பகுதியை சேர்ந்தவர் கோபி. அரசு பிலிம்ஸ் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் இவர், நடிகர் விமல் 5 கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதில், “2016ஆம் ஆண்டு மன்னர் வகையறா என்ற படத்தை தயாரிக்க இருப்பதாக கூறி 5 கோடி ரூபாய் பணத்தை நடிகர் விமல் பெற்றார். பின்னர், படத்தால் நஷ்டம் ஏற்பட்டதாக கூறி, பணத்தை திருப்பி தராமல் காலம் தாழ்த்தி வருகிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
1 கோடியே 30 லட்சம் ரூபாய் கடனை திருப்பி செலுத்திவிட்டு, மீத தொகையை 6 மாதத்திற்குள் தருவதாக விமல் கூறியதாகவும், பொய்யான காரணங்களை கூறி விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் தன் மீது புகார் அளித்துள்ளதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.பணத்தை திருப்பிக்கேட்டால் நடிகர் விமல் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும், எனவே விமல் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு கொடுக்கும்படி அந்த புகாரில் கோபி தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு தனது வழக்கறிஞருடன் வந்த நடிகர் விமல், தயாரிப்பாளர் கோபி, தன் மீது கொடுத்தது பொய் புகார் என விளக்கம் அளித்தார். தன் மீதான புகார் குறித்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருவதாகவும் நடிகர் விமல் செய்தியாளர்களிடம் கூறினார்.