மாணவியின் தவறான முடிவு குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து கொலையா? உயிரிழப்பா? என விசாரணை செய்ய வேண்டும் என்று மதுரை விமான நிலையத்தில் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
மதுரையில் மத்திய மாநில அரசுக்கு எதிராக தேமுதிக சார்பில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காகச் சென்னையிலிருந்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மதுரை விமான நிலையம் சென்றார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மத்திய மாநில அரசு தற்போது மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு எனத் தொடர்ந்து மக்களுக்குத் தேவையான அனைத்தையும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே போவதாகக் குற்றச்சாட்டு தெரிவித்தார். மேலும், தற்போது ஜிஎஸ்டி உள்ளதால், ஏற்கனவே மக்கள் அதிகப்படியான வரியைச் செலுத்தி வருவதால், மக்களின் வருமானத்திற்கு என்ன வழி என்பதனை அரசாங்கம் யோசிக்க வேண்டும் எனவும், அரசாங்கம் என்பது மக்களுக்கானது எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், கொரோனாவிலிருந்து மக்கள் இன்னும் மீளாமல் உள்ளனர். ஆனால், அரசாங்கத்திற்கு மட்டும் வருமானம் வர வேண்டும் என்பது தவறு எனக் கூறினார். மேலும் பேக் செய்த அனைத்து உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி என்பதை ஏற்றுக் கொள்ள முடியாதது எனத் தெரிவித்த அவர், இதற்காக தேமுதிக சார்பாகத் தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாகத் தெரிவித்தார்.
அண்மைச் செய்தி: ‘எகிறும் எதிர்பார்ப்பு; நாளை வெளியாகிறது ‘தி லெஜண்ட்’’
மத்திய அரசாக இருந்தாலும் மாநில அரசாக இருந்தாலும் மக்களுக்கான அரசாக அரசாக இருந்தால் அதனை வரவேற்கக் கூடிய விஷயமாக இருக்கும் எனத் தெரிவித்த அவர், விஜயகாந்த் கூறியது போல் இந்த விலைவாசி உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்த உள்ளதாகக் கூறினார். தொடர்ந்து பள்ளி மாணவிகள் தவறான முடிவுக்குச் செல்வது அதிகரித்து வருவது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த அவர், இந்தப் பிரச்சனை சிபிசிஐடிக்கு மாற்றினால் மட்டும் போதாது ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து அந்த மாணவிகள் கொலை செய்யப்படுகிறார்களா? அல்லது தவறான முடிவை எடுத்தார்களா என முதலில் கண்டுபிடிக்க வேண்டும் எனவும், இதற்குத் தமிழ்நாடு அரசு சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கூறினார்.
நேஷனல் ஹெரால்ட் அமலாக்கத் துறையினர் விசாரணை குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், காங்கிரஸ் ஆட்சியிலிருந்தபோது பல்வேறு ஊழல் வழக்குகளைப் போட்டனர், தற்போது பாஜக ஆட்சியின் போது பழைய ஊழல் வழக்குகளைப் போடுகிறது தற்போது யார் ஆளும் கட்சியாக இருக்கிறார்களோ, அவர்கள் முன்னாள் ஆளும் கட்சியாக இருந்தவர்கள் மீது ஊழல் வழக்குகளைப் போடுவது தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியா முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகத் தெரிவித்த அவர், தப்பு செய்தால் யாராக இருந்தாலும் தண்டனை அனுபவிக்கத் தான் வேண்டும் எனத் தெரிவித்தார்.








