40 நாட்கள் பயணமாக 74 நகரங்கள் கடந்து வந்த நிலையில், இருசக்கர வாகனங்களின் அணிவகுப்பில் ஒலிம்பியாட் ஜோதி இன்று மாமல்லபுரம் வந்தடைந்தது.
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் தொடங்கி ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடக்க உள்ள நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்கவிழா நிகழ்ச்சி பெரியமேட்டில் அமைந்துள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நாளை நடைபெற இருக்கிறது. சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன. சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தலைமையில் 22 ஆயிரம் போலீஸார் ஐந்து அடுக்கு பாதுகாப்பில் நாளை ஈடுபட இருக்கிறார்கள். மேலும், ட்ரோன்கள் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழா நிகழ்ச்சியில் 187 நாடுகளைச் சேர்ந்த 2,000க்கும் மேற்பட்ட வீரர்கள், மத்திய மாநில அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க இருப்பதால் இன்றே நேர் உள்விளையாட்டிற்கு அரங்கிற்கு வரும் வாகனங்கள் அனைத்துமே முழுமையான சோதனைக்குப் பிறகு உள்ளே அனுமதிக்கப்படுகின்றன. முறையான அனுமதி அட்டை வைத்திருக்கக்கூடிய நபர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள்.
செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு, கடந்த மாதம் 19 ஆம் தேதி டெல்லியில் தொடங்கிய ஜோதி ஓட்டம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. 40 நாட்கள் பயணமாக 74 நகரங்கள் கடந்து வந்த நிலையில், இன்று சென்னை வந்தடைகிறது ஒலிம்பியாட் ஜோதி. விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன், ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோர் ஒலிம்பியாட் ஜோதியைப் பெற்றுக் கொள்கிறார்கள்.
இதில், அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பின் தலைவர் சஞ்சய் கபூர், செயலாளர் பரத் சிங், தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர். பள்ளி மாணவ, மாணவிகள் 200க்கும் மேற்பட்ட பெண்கள் சதுரங்க காய்கள் பொறிக்கப்பட்ட பதாகைகள் கொண்டு அணிவகுப்பு, தேசியக் கொடி ஏந்திய இளைஞர் அணி அணிவகுப்பு நடைபெற்றது. கரகாட்டம், தாரை தப்பட்டை முழங்க ஜோதி வரவேற்பு தொடங்கியது.
-ம.பவித்ரா








