பாஜகவின் பிரித்தாளும் சூழ்ச்சி காரணமாக அதிமுக இந்த நிலைமைக்கு வந்து விட்டது எனவும், அதிமுகவுக்கு யார் தலைவராக வந்தாலும் டெல்லியில் அடமானம் வைக்கப்பட்ட அதிமுகவை மீட்க வேண்டும் என மதுரையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
மதுரையில் திராவிடர் கழகத்தின் மாநில பொதுக்குழு, அக்கட்சியின் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்றது, அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “மாநில பொதுக்குழுக் கூட்டத்தில் 8 தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை ஒன்றிய அரசு செயல்படுத்த வேண்டும், 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழில் மாணவர்கள் தோல்வியடைந்தது அதிர்ச்சியாக உள்ளது எனக் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், மாணவர்களுக்குத் தமிழ் கற்றுக் கொடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும், ஒன்றிய அரசு அக்னிபத் திட்டத்தை ரத்து செய்து, பழைய நடைமுறைப்படி இராணுவத்தில் ஆட்கள் சேர்க்க வேண்டும் எனக் கூறினார். மேலும், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி காக்கப்பட வேண்டும் எனவும், ஆதீனங்கள் ஆதீனமாக உலவக் காரணம் திராவிட இயக்கம் தான் எனத் தெரிவித்தார்.
’சனாதன தத்துவப்படி ஆதீனங்கள் ஆதீனமாக இருக்க முடியாது’ எனத் தெரிவித்த அவர், அந்த அந்தஸ்தை வாங்கிக் கொடுத்ததே திராவிட இயக்கம் தான் எனவும், பாஜகவின் பிரித்தாளும் சூழ்ச்சி காரணமாகத் தமிழ்நாட்டில் அதிமுக – பாஜக இடையே யார் எதிர்க்கட்சி என்ற போட்டியில், தற்போது எதிர்க்கட்சிக்குள் யார் எதிர்க்கட்சி என்ற போட்டி வரும் அளவுக்குக் கட்சியை உடைத்து விட்டார்கள் எனக் குற்றம்சாட்டினார். மேலும், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் பாஜகவுக்கு எதிராக ஒன்றிணைய வேண்டியது காலத்தின் கட்டாயம், லேடியா மோடியா எனக் கேட்ட தலைவியின் கட்சியில் தலைவியை மறந்து விட்டு தற்போது யார் தலைவர் எனப் போட்டிப் போட்டுக்கொண்டு உள்ளார்கள் எனக் கூறிய அவர், யார் தலைவராக வந்தாலும் டெல்லியில் அடமானம் வைக்கப்பட்ட கட்சியை மீட்க வேண்டும் எனக் கூறினார்.
அண்மைச் செய்தி: ‘அருவியில் குளித்த பெண்களிடம் மதுபோதையில் சில்மிஷம்; 5 பேர் கைது’
அதிமுக அடமான திமுகவாக உள்ளது, அண்ணா திமுகவாக இல்லை எனக் கூறிய அவர், எம்ஜிஆர் ஜெயலலிதா காட்டிய கொள்கை உறுதியை இப்போதுள்ள நிர்வாகிகளும் காட்ட வேண்டும், கவலையோடு சொல்கிறேன். நல்ல இயக்கமான அதிமுக கொள்கையை முன்னிறுத்தாமல் தங்களை முன்னிறுத்திக் கொண்டதால் தற்போது இந்த நிலைக்கு வந்துள்ளது எனத் தெரிவித்த அவர், தங்கள் வருமானத்தைப் பார்க்காமல் அடமானம் வைக்கப்பட்ட கட்சியை மீட்கும் வழியைப் பார்க்க வேண்டும் எனக் கூறினார்.








