சிவ சேனாவைவிட்டு வெளியேறியவர்கள் பால் தாக்கரேவின் பெயரை பயன்படுத்தக் கூடாது என்று சிவ சேனா தலைவரும் மகாராஷ்ட்ர முதலமைச்சருமான உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
சிவ சேனாவைச் சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் 38 பேர் தனி அணியாக செயல்படப் போவதாக இன்று அறிவித்தனர். தங்கள் அணிக்கு சிவ சேனா பாலாசாஹெப் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறினர்.
இந்நிலையில், சிவ சேனாவின் தேசிய செயற்குழுக் கூட்டம், உத்தவ் தாக்கரே தலைமையில் மும்பையில் இன்று கூடியது. மும்பை சிவ சேனா பவனில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த உத்தவ் தாக்கரே, “அவர்கள்( அதிருப்தி எம்எல்ஏக்கள் ) என்ன செய்ய விரும்புகிறார்களோ அதைச் செய்யட்டும். அவர்கள் விஷயத்தில் தலையிட விரும்பவில்லை. அவர்கள் முடிவை அவர்கள் எடுக்கட்டும். ஆனால், அவர்கள் பால் தாக்கரேவின் பெயரை பயன்படுத்தக்கூடாது” என தெரிவித்தார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சிவ சேனா செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவத், கட்சியில் இருந்து வெளியேறியவர்கள் மீது கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே இன்று மாலைக்குள் நடவடிக்கை எடுப்பார் என தெரிவித்தார்.
தேர்தலில் ஓட்டு கேட்க அவர்கள் செல்லும்போது, சிவ சேனாவின் பெயரையோ, பால் தாக்கரேவின் பெயரையோ பயன்படுத்தக் கூடாது என உத்தவ் தாக்கரே கூட்டத்தில் வலியுறுத்தியதாகக் குறிப்பிட்ட சஞ்சய் ராவத், அவர்களின் தந்தையின் பெயரைக் கொண்டு அவர்கள் ஓட்டுக் கேட்கட்டும் என்று தெரிவித்ததாகவும் கூறினார்.
கூட்டத்தில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும், பால் தாக்கரேவின் ஹந்துத்துவ கொள்கையை தொடர்ந்து பின்பற்ற தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
கட்சிக்கு துரோகம் இழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரம் உத்தவ் தாக்கரேவுக்கு இருப்பதாகத் தெரிவித்த சஞ்சய் ராவத், பால் தாக்கரே பெயரை சுயநல அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்துபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.











