தமிழகத்தின் அடுத்த சட்டம்-ஒழுங்கு டிஜிபி யார்?

தமிழக காவல்துறையில் அடுத்த டிஜிபி யார் என்ற போட்டியில் முதல் 3 இடங்களில் இருப்பவர்கள் யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த ஒரு செய்தித்தொகுப்பை பார்க்கலாம். தமிழக காவல்துறை சட்டம் ஒழுங்கு…

தமிழக காவல்துறையில் அடுத்த டிஜிபி யார் என்ற போட்டியில் முதல் 3 இடங்களில் இருப்பவர்கள் யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த ஒரு செய்தித்தொகுப்பை பார்க்கலாம்.

தமிழக காவல்துறை சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பணியாற்றி வரும் சைலேந்திரபாபு வரும் ஜூன் மாதம் ஓய்வு பெறுகிறார். காவல்துறையில் சட்டம்-ஒழுங்கு டிஜிபி பதவி தான் உச்சபட்ச அதிகார பதவியாக கருதப்படுகிறது. காவல்துறையில் ஐபிஎஸ் அதிகாரிகள் 30 ஆண்டுகள் பணியை பூர்த்தி செய்தால், டிஜிபி பதவிக்கு தகுதி பெற்றுவிடுவர்.

டிஜிபி அந்தஸ்தில் பலர் இருந்தாலும் சட்டம்- ஒழுங்கு பதவி வகிப்பது ஐபிஎஸ் அதிகாரிகளின் கனவாகும். இந்த வகையில் வரும் ஜூன் மாதம் காலியாக உள்ள சட்டம்- ஒழுங்கு டிஜிபி பதவியை யார் பிடிக்கப்போகிறார்கள் என்பது தான் தமிழக காவல் துறையில் தற்போதைய “ஹாட் டாபிக்காக உள்ளது.

30 ஆண்டுகள் ஐபிஎஸ் பதவியை நிறைவு செய்த காவல்துறை அதிகாரிகளின் பட்டியல் மத்திய உள்துறைக்கும், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கும் மார்ச் மாதமே தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு மூலம் அனுப்பப்பட்டுவிட்டது. இதில் விரைவில் டிஜிபி பதவி உயர்வு பெற உள்ள ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், சிபிசிஐடி கூடுதல் டிஜிபி அபய்குமார் சிங் உள்ளிட்ட 14 ஐபிஎஸ் அதிகாரிகளின் பட்டியல் உள்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதிலிருந்து 3 பேர் பட்டியலை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆய்வு செய்து தமிழக அரசுக்கு வரும் ஜூன் மாத இறுதியில் அனுப்பி வைக்க உள்ளது.

தற்போதைய டிஜிபி சீனியாரிட்டி பட்டியலின் படி முதல் இடத்தில் இருப்பது டெல்லி காவல் ஆணையராக பணியாற்றும் சஞ்சய் அரோரா பெயர் தான் உள்ளது. 1988ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தவர்களில் டிஜிபி பதவிக்கு தகுதி பெறுவோருக்கான பட்டியலில் பணியில் இருப்பது சஞ்சய் அரோரா மட்டுமே. இவருக்கு அடுத்த இடத்தில் உள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை டிஜிபி கந்தசாமி ஏப்ரல் மாதமே ஓய்வு பெறுகிறார்.

சட்டம்- ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்பட வேண்டுமானால் ஓய்வு பெற குறைந்தபட்சம் 6 மாதங்களுக்கு மேல் இருக்க வேண்டும். இவருக்கு அடுத்த சீனியாரிட்டியில் உள்ள பிரமோத் குமார், வழக்கு ஒன்றில் சிக்கி வெளியே வந்து விட்டதால் கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு கூட பெற முடியாமல் போக்குவரத்து காவல்துறை திட்டமிடல் பிரிவு ஐ.ஜி.யாகவே உள்ளார்.

கடந்த அதிமுக ஆட்சியில் சிறப்பு டிஜிபியாக நியமிக்கப்பட்டிருந்த ராஜேஷ்தாஸ், பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதனால் ஊர்க்காவல்படை டிஜிபியாக பணியாற்றும் பி.கே.ரவி, டிஜிபி பட்டியலில் 2வது இடத்திலும், சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் 3-வது இடத்திலும் உள்ளனர். இவர்கள் 3 பேரில் இருந்து தான் ஒருவர் தமிழக சட்டம்- ஒழுங்கு டிஜிபியாக தேர்வு செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த 3 பேரில் பி.கே.ரவி தீயணைப்புத்துறை டிஜிபியாக இருந்து மாற்றப்பட்டு தற்போது ஊர்க்காவல்படை டிஜிபியாக உள்ளார். இவருக்கு அடுத்தபடியாக தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தின் டிஜிபியான ஏ.கே.விஸ்வநாதன் பெயர் சீனியாரிட்டியில் 4ஆவது இடத்தில் உள்ளது. இருப்பினும் சஞ்சய் அரோரா, சங்கர் ஜிவால் ஆகிய இருவரில் ஒருவர் தான் சட்டம் – ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக காவல்துறை வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. அதிக அனுபவம் வாய்ந்த சஞ்சய் அரோரா பெயர் தான் தற்போது வரை டிஜிபி பெயர் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.