அடுத்த சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி ரேசில் யார்..யார் ?

தமிழ்நாட்டின் அடுத்த சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி யார் என்ற கேள்வி காவல்துறையில் பல்வேறு மட்டங்களில் விவாத பொருளாக மாறியுள்ளது. இந்த ரேசில் மூன்று உயரதிகாரிகள் பெயர்கள் அடிபடுகின்றன. இவற்றில் இருந்து யாராவது ஒருவர்…

தமிழ்நாட்டின் அடுத்த சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி யார் என்ற கேள்வி காவல்துறையில் பல்வேறு மட்டங்களில் விவாத பொருளாக மாறியுள்ளது. இந்த ரேசில் மூன்று உயரதிகாரிகள் பெயர்கள் அடிபடுகின்றன. இவற்றில் இருந்து யாராவது ஒருவர் தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போதைய சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியும் 1993 பேட்ச் அதிகாரியான தாமரைக் கண்ணன் தமிழக உளவுத்துறை எஸ்பி, மயிலாப்பூர், புனித தாமஸ்மலை துணை ஆணையர், சென்னை நுண்ணறிவுப்பிரிவு கூடுதல் ஆணையர்,போக்குவரத்து கூடுதல் ஆணையர், சிபிசிஐடி ஐஜி ஆகிய முக்கியப்பதவிகளை வகித்தவர். இவர் வரும் டிசம்பர் மாதத்துடன் ஓய்வு பெறுகிறார்.

இதனையடுத்து இந்த இடத்தை பிடிக்க காவல்துறை மூத்த அதிகாரிகளிடையே கடும் போட்டி நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தாம்பரம் மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ், கிரைம் ஏடிஜிபி மகேஷ் குமார் அகர்வால் மற்றும் அட்மின் ஏடிஜிபி சங்கர் ஆகியோர் பெயர்கள் அடிபடுகின்றன.

காவல்துறையை பொருத்தவரை சட்டம் ஒழுங்கு டிஜிபி பதவிக்கு அடுத்து பவர்புல்லான பதவியாக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி பதவி பார்க்கபடுகிறது. இதில் தாம்பரம் சிட்டி கமிஷனர் அமல்ராஜ் கடந்த 1996ஆம் பேட்ஜ் அதிகாரி ஆவார். இவர் திருப்பூரில் ஏஎஸ்பியாக பணியை தொடங்கி மதுரை மாநகர துணை ஆணையர் மற்றும் மதுரை புறநகர் தேனி, காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் காவல்துறை கண்காணிப்பாளராக பணியாற்றியுள்ளார். டிஐஜியாக பதவி உயர்வு பெற்றவுடன் திருச்சி, சேலம், இராமநாதபுர சரகங்களில் பணியாற்றியுள்ளார். இப்படி பல்வேறு படிநிலைகளை கடந்து ஏடிஜிபியான அவர் தற்போது தாம்பரம் மாநகர கமிஷனராக உள்ளார்.

மற்றொரு அதிகாரியான ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர். தன்னுடைய 22-ம் வயதில் 1994-ம் ஆண்டு, சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சிபெற்று ஐபிஎஸ் அதிகாரியானார். தேனி எஸ்பி-யாக இவர் பணியாற்றி, பின்னர் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி-யாக இடமாற்றம் செய்யப்பட்டார். அதன்பிறகு, 2001-ம் ஆண்டு சென்னைக்கு இடமாறுதல் செய்யப்பட்டார். சென்னை பூக்கடை துணை கமிஷனராக நியமிக்கப்பட்ட மகேஷ்குமார் அகர்வால், போக்குவரத்து பிரிவில் துணை கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

அயல்பணியாக சிபிஐ அதிகாரியாக 10 ஆண்டுகள் பல மாநிலங்களில் பணியாற்றினார். அதன்பிறகு மீண்டும் சென்னைக்கு மாறுதலாகினார். ஐஜி-யாக சிபிசிஐடி-யில் பணியாற்றினார். அடுத்து மதுரை கமிஷனர், சென்னை தெற்கு மண்டல கூடுதல் கமிஷனராகப் பணியாற்றினார். பின்னர், டிஜிபி அலுவலகத்தில்  செயலாக்கப்பிரிவு ஏடிஜிபி-யாகப் பணியாற்றிவந்தார். சென்னை போலீஸ் கமிஷனராகவும் பணியாற்றியவர்.  தற்போது கிரைம் ஏடிஜிபியாக உள்ளார்.

இதேபோல் நிர்வாகப்பிரிவு கூடுதல் டிஜிபியாக உள்ள சங்கர் கடந்த 1996ஆம் ஆண்டு பேட்ஜ் அதிகாரி ஆவார். இவர் வடக்கு மண்டல ஐஜியாகவும், அதனைத்தொடர்ந்து பதவி உயர்வு பெற்று காவல்துறை தலைமையக கூடுதல் டிஜிபியாகவும் பணியாற்றியவர். தற்போது நிர்வாகப்பிரிவு கூடுதல் டிஜிபியாக உள்ளார்.

இந்த மூன்று பேரில் தாம்பரம் கமிஷனராக அமல்ராஜ் இருப்பதால், இவருக்கு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி பொறுப்பை பெறுவதில் பெரிய ஆர்வம் இல்லை என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் கூடுதல் டிஜிபி சங்கர் மற்றும் மகேஷ் குமார் அகர்வால் இடையேதான் கடுமையான போட்டி இருப்பதாக தெரிகிறது. இதில் சங்கர் அமைதியாகவும், நிதானமாகவும் வேலை பார்ப்பவர் என்றும், மகேஷ் குமார் அகர்வால் அதிரடியாக பணியாற்றக்கூடியவர் என்ற கூடுதல் தகவலும் உள்ளன. இவர்களில் யார் அடுத்த சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி  என்பது வரும் நாட்களில் தெரிந்துவிடும்.

இராமானுஜம்.கி

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.