”கர்நாடக முதல்வர் யார்? இன்று முடிவு தெரிந்துவிடும்” – சித்தராமையா பேட்டி

கர்நாடகாவில் முதல்வர் யார் என்பது குறித்து இன்றே முடிவு எடுக்கப்படும் என காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா தெரிவித்துள்ளார். கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே 10 ஆம் தேதி நடைபெற்ற நிலையில், வாக்கு…

கர்நாடகாவில் முதல்வர் யார் என்பது குறித்து இன்றே முடிவு எடுக்கப்படும் என காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே 10 ஆம் தேதி நடைபெற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை மே 13 ஆம் தேதி நடைபெற்றது. காங்கிரஸ் கட்சி 135 இடங்களை கைப்பற்றி அங்கு ஆட்சியைப் பிடித்துள்ளது. பாஜக 66 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

இதையடுத்து கர்நாடகாவில் முதலமைச்சர் பதவி யாருக்கு என்பதில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது. நேற்று இரு தலைவர்களின் வீடுகளின் முன்பு அவர்களுடைய ஆதரவாளர்கள், அடுத்த முதலமைச்சர் என குறிப்பிட்டு போஸ்டர்களை ஒட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்ந்து அடுத்த முதலமைச்சர் யார் என்று புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் நேற்றிரவு நடைபெற்றது. அப்போது சித்தராமையாவின் ஆதரவாளர்கள், அவர் முதலமைச்சர் வேட்பாளர் ஆக வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கர்நாடக முதலமைச்சர் தேர்வு குறித்த இறுதி முடிவை கட்சி மேலிடம் முடிவு செய்யும் என்று சட்டமன்ற உறுப்பினர் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் இன்று தேசிய ஊடகத்திற்கு பேட்டியளித்த சித்தராமையா கூறியதாவது :

கர்நாடகாவில் முதல்வர் யார் என்பது குறித்து இன்றே முடிவு எடுக்கப்படும். காங்கிரஸ் கட்சியின் வெற்றி, ஆறரை கோடி கன்னடர்களுக்கான வெற்றி. மக்கள், பாஜக மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.

நான் முதல்வராக வர வேண்டும் என பெரும்பான்மையான எம்.எல்.ஏக்கள் வாக்களித்ததாக நினைக்கிறேன். ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இருப்பினும் உயர்மட்ட குழு தான் முதல்வரை முடிவு செய்வார்கள் என்பது நடைமுறை. அதன்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனக்கு அதிக நபர்கள் ஆதரவு உள்ளது என்ற நம்பிக்கை இருக்கிறது. மேலிட பொறுப்பாளர்கள் மீதும் நம்பிக்கை உள்ளது. பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்கள் எனக்கு வாக்களித்து இருப்பார்கள் என நம்புகிறேன்.

மேலிட பொறுப்பாளர்கள் அழைப்பை ஏற்று டெல்லி செல்கிறேன். இரவு 12 மணிக்கு பிறகு கேக் வெட்டி, டி.கே.சிவகுமாரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன். எனக்கும் சிவகுமாருக்கும் இடையே தனிப்பட்ட உறவு நன்றாக உள்ளது. என்னை முதல்வராக தேர்வு செய்ய எத்தனை சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தார்கள் என்று எனக்கு தெரியாது. ஆனால் பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்கள் எனக்கு வாக்களித்துள்ளார்கள்”.

இவ்வாறு கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.