ஹரியானா, மணிப்பூரில் நடந்த மோதல்கள் தொடரும் நிலையில், நாடு எப்படி விஸ்வகுருவாகும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்று உரையாற்றினார். அப்போது, “மணிப்பூர் எரிகிறது. ஒரு சகோதரன் இன்னொரு சகோதரனுக்கு எதிராக ஆயுதம் ஏந்துகிறான். ஹரியானாவிலும் இரண்டு சமூகங்கள் சண்டையிடுவதைப் பார்த்தோம். இவை அனைத்தும் யாருக்கு லாபம்? இந்தியா எப்படி விஸ்வகுருவாகும்?.
ஒரு குடும்பம் தந்தை இறந்த பிறகு, அவரது நான்கு வாரிசுகளும் தந்தையின் பணத்திற்காக போராடுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம், அந்த குடும்பம் முன்னேற முடியுமா? அவர்கள் தங்கள் தந்தை சம்பாதித்ததைக் கூட அழித்துவிடுவார்கள். நாம் விஸ்வகுரு ஆக விரும்பினால், நாட்டின் 140 கோடி மக்களும் ஒரு குடும்பம் போல் இருக்க வேண்டும்” என்று கெஜ்ரிவால் தெரிவித்தார்.
பறிக்கப்பட்ட உரிமைகளை திரும்ப பெறுவோம் என்று டெல்லி மக்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன். நாங்கள் உச்ச நீதிமன்றம் சென்று போராடுவோம். நல்ல கல்வி, சுகாதார வசதிகளை வழங்கும் பணி தொடரும். என கெஜ்ரிவால் கூறினார்.







