அதிமுக என்ன செய்ய வேண்டும் என கூறுவதற்கு நீங்கள் யார் என்று அதிமுக தகவல் தொழில்நுட்ப மண்டல செயலாளர் சிங்கை இராமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், இன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் தமிழ்நாடு பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி ஆகியோர் அதிமுக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தனர். தொடர்ந்து, அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தையும் சந்தித்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து சி.டி.ரவி வெளியிட்ட அறிக்கையில், ஈரோடு இடைத்தேர்தலில் திமுகவை வீழ்த்த ஒருங்கிணைந்த அதிமுக தேவை என்றும், இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகியோரை சமாதானப்படுத்த முயற்சி செய்ததாகவும் தெரிவித்தார். மேலும், தேமுதிகவும் அதிமுகவும் ஒன்றுபடுவது அவசியம் என்று டகுறிப்பிட்டுள்ள அவர், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா சார்பாக இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகியோரிடம் சில விஷயங்களை தெரிவித்ததாகவும் கூறினார்.
இந்நிலையில், இதுகுறித்து அதிமுக தகவல் தொழில்நுட்ப மண்டல செயலாளர் சிங்கை இராமச்சந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “அதிமுக என்ன செய்ய வேண்டும் என்று கூறுவதற்கு நீங்கள் யார்? தேசிய கட்சியைச் சார்ந்தவர் என்பதால், என்ன வேண்டுமானாலும் சொல்லிவிடலாமா? கர்நாடகா பாஜக எவ்வாறு செயல்பட வேண்டும் என நாங்கள் அறிவுரை கூறினால் ஏற்றுக் கொள்வீர்களா? திமுகவை எதிர்த்து தனித்து ஒரு தேர்தலில் கூட வெற்றி பெறாத பாஜக, 30 ஆண்டுகள் தமிழ்நாட்டில் ஆட்சி நடத்திய அதிமுகவுக்கு அறிவுரை கூறுவது நியாயமா? உங்களது வரம்புகளை அறிந்து கொள்ளுங்கள்!” என்று பதிவிட்டுள்ளார்.