வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அசாம் மாநிலத்தின் பார்பேடாவில் கிருஷ்ணகுரு சேவா ஆசிரமம் சார்பில் நடைபெற்ற உலக அமைதிக்கான மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய பிரதமர் மோடி, இந்திய கலாச்சாரம், சேவை, மனிதநேயம் போன்ற பண்புகளை கிருஷ்ண சேவா மையம் தொடர்ந்து உறுதியாக கடைபிடித்து வருவதை பராட்டுவதாக தெரிவித்தார். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டது பெருமையளிக்கிறது என தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கடந்த 2019ம் ஆண்டு அசாமில் புஸ்கரம் திருவிழா நடைபெற்றது. இது பிரம்மபுத்திரா நதியில் 12 ஆண்டுகளுக்கு நடத்தப்படும் பாரம்பரிய திருவிழாவாகும். இதேபோல் தமிழ்நாட்டிலுள்ள கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகா கும்பமேளா நடந்து வருவதாக தெரிவித்தார்.
இன்றைய காலகட்டத்தில் வளர்ச்சியில் பின்தங்கியிருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் சுற்றுலாத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியா முழுவதும் உள்ள 50 சுற்றுலா தலங்கள் மேம்படுத்தப்படும்.
ஒவ்வொரு மாநிலத்திலும் ஒருங்கிணைந்த வணிக வளாகங்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் விவசாய விளைப்பொருட்கள், கைவினை பொருட்கள் ஆகியவை காட்சிப் படுத்தப்பட்டு விற்பனைக்கு வைக்க இந்த பட்ஜெட்டில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
கங்கா விலாஸ் சொகுசு கப்பல் விரைவில் அசாமை வந்தடையும். இந்த கப்பலில் பயணிக்கும் மக்கள், இந்திய கலாசாரம் மற்றும் தாங்கள் செல்லும் இடங்களின் சிறப்பு குறித்து அறிந்து வருகின்றனர். அவர்கள் மூலம், அசாமின் கலாசாரம் உலகம் முழுவதும் அறிய செய்யப்படும் என பிரதமர் மோடி கூறினார்.