வெள்ளை அறிக்கை: தவெக அரசின் முகமூடி கிழிந்தது – நயினார் நாகேந்திரன்…!

தவெக அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கை ஒரு வீண், வெற்று அறிக்கை என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் நாடு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிடுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழகத்தின் நிதிநிலைக்குறித்து ஒரு வெள்ளைஅறிக்கை வெளியிட்டுள்ளது தவெக அரசு. இது தமிழக மக்களுக்கு ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் கொடுத்துள்ளன. மரக்கட்டையில் செருகியிருந்த ஆப்பை அசைத்து வால் மாட்டிக்கொண்ட ஒரு குரங்கின் கதையாய் முடிந்திருக்கிறது தவெக அரசின் இந்தச் செயல். இந்த வெள்ளை அறிக்கையின் மூலம் கடந்த சட்டமன்றத் தேர்தலில் நிறைவேற்ற முடியாத, கற்பனைக்கு எட்டாத பொய் வாக்குறுதிகளை மக்கள் முன் அளித்த தவெக அரசின் முகமூடி கிழிக்கப்பட்டிருக்கிறது.

திமுக ஆட்சிக்காலத்தில், தமிழகத்தின் கடன் ரூ13.18 லட்சம் கோடி என்றும், வருவாய் பற்றாக்குறை ரூ.78.324 கோடி என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் திரு. விஜய் அவர்களே, கடந்த சட்டமன்றத்தேர்தல் நடப்பதற்கு முன்பே, இந்த நிதிநிலையின் அவல நிலை அனைத்து தமிழ் குடிமக்களுக்கும் தெரியும். அப்படி இருக்கும் நிலையில் உங்களுக்கு மட்டும் எப்படி தெரியாமல் போனது. நீங்கள் அறிந்தும் அறியாததுப் போல் நடிக்கிறீர்கள். இவ்வளவு நிதிநிலை நெருக்கடி தெரிந்தும் எப்படி வானளாவ வாக்குறுதிகளை அள்ளிவிட்டீர்கள்? இது வேடிக்கையாகவும் அபத்தமாகவும் உள்ளன.

அரசின் நிதி வருவாயைப் பெருக்க நிதி ஆதார வழிமுறைகளை ஆராய்ந்து செயல்படுவதை விட்டுவிட்டு, ஏதோ யாருக்குமே தெரியாத புதிய காரணத்தைக் கண்டுபிடித்ததுபோல் பேசியிருப்பது சிறுப்பிள்ளை தனமானது.

தவெக அரசு தன் பொறுப்பை தட்டிக் கழித்து, தப்பிச்செல்ல வழி பார்க்கிறது என்பதுதான் இதன் மூலம் தெரியவருகிறது. தற்போதுள்ள நிதி நெருக்கடியின் காரணமாக தவெக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது, தெரியாத்தனமாக சொல்லிவிட்டோம் எங்களை மன்னித்துவிடுங்கள் என்று கெஞ்சுவார்கள் போலிருக்கிறது. அவர்களது நிலை மிக மோசமாக உள்ளது.

ஆக, தவெக அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கை ஒரு வீண், வெற்று அறிக்கை நெறியற்ற அரசியலின் நெருஞ்சி முள்பாதையில் அழைத்துச்செல்லும் மக்கள் விரோத செயல். திமுக அரசை குறை சொல்லிவிட்டு தவெக அரசும் அதன் பாதையிலேயே பயணிக்கிறது. இதனால், இவர்கள் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை குறைய ஆரம்பித்திருக்கிறது. இது தொடருமானால் இவர்களது அரசும் எதிர்காலத்தில் நம்பிக்கை இழக்கும் என்பது உறுதி.

காட்சி பிழைகளோ, இடமாறு தோற்றப் பிழைகளோ முதல்வர் ஜோசப் விஜய்க்கு எப்போதும் ஏற்படக்கூடாது. தமிழக மக்களுடைய அபிலாஷகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பில் தமிழக முதல்வர் இருக்கிறார்.

ஆகவே முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள் இருட்டறையில் இல்லாத ஒன்றை தேடுவதைப்போல், வெற்றுக் காரணங்களை தேடாமல், உண்மை காரணங்களைக் கண்டுபிடித்து தமிழக மக்களுக்கு தங்களின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டவாறு அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.