நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் உயிரை மாய்த்துக்கொண்ட நிலையில், அவர் எழுதி வைத்த கடிதம் கைப்பற்றப்பட்டுள்ளது!

நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் உயிரை மாய்த்துக்கொண்ட நிலையில், அவர் எழுதி வைத்த கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றி உள்ளனர். தமிழ் திரைப்படங்களின் முன்னணி இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே…

நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் உயிரை மாய்த்துக்கொண்ட நிலையில், அவர் எழுதி வைத்த கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

தமிழ் திரைப்படங்களின் முன்னணி இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இவரது மனைவி பாத்திமா. இவர் திரைப்பட தயாரிப்பாளர். இவர்களுக்கு 2 மகள்கள். மூத்த மகள் மீரா சென்னையில் உள்ள சர்ச் பார்க் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்றிரவு தந்தை விஜய் ஆண்டனி அறையில் படுத்து தூங்கினார். இன்று 19 ஆம் தேதி அதிகாலையில் பார்த்த போது மீரா உயிரை மாய்த்து கொண்டது தெரியவந்தது.

உடனே வீட்டு பணியாளர் உதவியோடு கார் மூலம் காவேரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

பின்னர் உடற்கூறு ஆய்வுக்கு பிறகு மீராவின் உடல் டிடிகே சாலையில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.

இதுதொடர்பாக குற்றவியல் நடைமுறை சட்டம் 174 (இயற்கைக்கு மாறான மரணம்) பிரிவின் அடிப்படையில் தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனியார் பள்ளியில் மீரா பொருளாதார பாடப் பிரிவு எடுத்து படித்து வந்தார். பேட்மிட்டன் விளையாட்டில் ஆர்வம் கொண்டுள்ள மீரா, நேற்று விடுமுறை என்பதால் தோழிகளை சந்தித்து விட்டு வந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் கடந்த ஆறு மாதம் காலமாக தனியார் மருத்துவமனையில் மன அழுத்தத்திற்காக மீரா சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மீரா மன அழுத்தத்துடன் இருப்பதற்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக இந்த மன அழுத்தத்தின் காரணமாக மட்டுமே உயிரை மாய்த்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து மீராவின் தோழிகளிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

மீராவின் செல்போனை போலீசார் தொழில்நுட்பரீதியாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அவரது சமூக வலைதள பக்கங்கள் மற்றும் போட்டோக்கள் வீடியோக்கள் குறுஞ்செய்திகள் உள்ளிட்டவற்றையும் போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக உயிரை மாய்த்து கொள்வதற்கு முன்பு ஏதேனும் கடிதம் அல்லது வீடியோ பதிவிட்டுள்ளாரா எனவும் போலீசார் ஆய்வு செய்தனர்.

இதில் உயிரை மாய்த்து கொண்ட விஜய் ஆண்டனியின் மகள் மீராவின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது தெரியவந்துள்ளது. அதில், எல்லோருக்கும் என் அன்பு, நான் உங்களை பிரிவதாக உணர்கிறேன். எனக்கு தெரியும் நீங்களும் என் பிரிவை உணர்வீர்கள் என்று எனக்கு தெரியும். நான் எனது குடும்பம், நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களை பிரிகிறேன். அனைவரும் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருங்கள். வணக்கம். இவ்வாறு ஆங்கிலத்தில் எழுதியிருந்தார்.

இந்நிலையில், Love you all, Miss you all, I know that you’ll miss me and I miss my family, friends and teachers. Be safe and happy everyone. Good bye. என்று எழுதப்பட்ட அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர். இதனை தடயவியல் துறைக்கு அனுப்பி ஆய்வு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். இது நோட்டில் எழுதப்பட்டுள்ளதாகவும், இது தற்போது எழுதப்படவில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.