இடஒதுக்கீடு வழங்கும் அதிகாரம் மாநிலங்களிடம் இருக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இந்திய சமூகநீதிக் கூட்டமைப்பின் இரண்டாவது தேசிய மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, காணொலிக் காட்சி வாயிலாகத் தலைமையுரை ஆற்றினார். அதன் விவரம் வருமாறு.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
“அகில இந்திய சமூகநீதிக் கூட்டமைப்பின் இரண்டாவது மாநாட்டில் கலந்துகொண்டு உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
சமூக நீதி, மதச்சார்பற்ற அரசியல், சமதர்மம், சமத்துவம், மாநில சுயாட்சி,கூட்டாட்சிக் கருத்தியல் இவை உயிர்வாழும் இந்தியாவே, இணையற்ற இந்தியா என்பதால், இத்தகைய கருத்தியல்களை முன்னெடுக்க திமுக அகில இந்திய அளவில் சில கூட்டமைப்புகளை உருவாக்கி வருகிறது. அதில் மிகமிக முக்கியமானது இந்த சமூகநீதி கூட்டமைப்பு!
இதனை ஒருங்கிணைக்க தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டவர் மாநிலங்களவை உறுப்பினரும் மூத்த வழக்கறிஞருமான வில்சன். தன்னிடம் தரப்பட்ட மற்றுமொரு வேலையாகக் கருதாமல், தன்னுடைய வாழ்க்கைக் கடமையாக நினைத்து இந்தக் கூட்டமைப்பை உருவாக்கி – தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். அவருக்கு என்னுடைய பாராட்டுகளையும் – அழைப்பினை ஏற்று வருகை தந்துள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
திமுகவை பொறுத்தவரையில் சமூகநீதியைத்தான் இயக்கத்தின் இலக்கணமாக வைத்துள்ளது. இந்த இயக்கம் உருவாகக் காரணமே சமூகநீதிதான். சமூகநீதி – சமதர்ம சமுதாயத்தை அமைப்பதற்காகவே திராவிட இயக்கம் தோன்றியது. 1916-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட தென்னிந்திய நல உரிமைச் சங்கம் எனப்படும் நீதிக்கட்சியானது சமூகநீதியை உருவாக்கவே தொடங்கப்பட்டது.
சென்னை மாகாணத்தில் ஆட்சியைக் கைப்பற்றிய நீதிக்கட்சியின் ஆட்சியில், 1922-ஆம் ஆண்டு, அன்றைய முதலமைச்சர் பனகல் அரசர் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ உரிமை ஆணையைப் பிறப்பித்தார். அதுதான் இன்றுவரை தமிழ்நாட்டில் தொடர்கிறது. தமிழ்நாட்டைப் பார்த்து பல்வேறு மாநிலங்கள் சமூகநீதியை வழங்கி வருகின்றன. தமிழ்நாட்டு மக்களுக்கு சமூகநீதி வழங்கியது மட்டுமல்ல, இந்தியாவின் மற்ற மாநில ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் அத்தகைய உரிமை கிடைக்க வழிகாட்டியதும் திராவிட இயக்கம்தான்!
தமிழ்நாட்டில் நடந்த போராட்டங்களின் காரணமாகத்தான் இந்திய அரசியலமைப்புச் சட்டமே முதன்முறையாக திருத்தப்பட்டது. “சமுதாயத்திலும் கல்வியிலும் பிற்படுத்தப்பட்டவராக இருக்கும் எந்தச் சமூகத்தவர்க்கும் செய்யும் சலுகைகளை, அரசியல் சட்டத்தின் எந்தப் பிரிவும் தடுக்காது” என்பதுதான் அரசியலமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட 15(4) என்ற முதலாவது திருத்தம்! இந்த திருத்தத்துக்குக் காரணம், “happenings in Madras” என்று நாடாளுமன்றத்திலேயே சொன்னார் அன்றைய பிரதமர் நேரு.
‘Socially and Educationally’ என்பதுதான் அரசியலமைப்புச் சட்டத்தின் சமூகநீதி வரையறை! பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைக்க அதிகாரமளிக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 340-ஆவது பிரிவில் ‘Socially and Educationally’ என்பதுதான் வரையறையாக உள்ளது.
அதே சொல்தான் அரசியலமைப்புச் சட்டத்தின் திருத்தத்திலும் சொல்லப்பட்டது. அதாவது சமூகநீதி எனப்படும் இடஒதுக்கீடு என்பதே சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின் தங்கியவர்களுக்குத் தரப்பட வேண்டும் என்பதுதான் இந்திய அரசியலமைப்புச் சட்ட வரையறை!
இதனைத் தொடர்ந்து அகில இந்தியாவுக்குமான சமூகநீதிக் குரலை எங்கள் தலைவர் கருணாநிதி எதிரொலித்தார்கள். 14.10.1973 அன்று அலகாபாத்தில் உத்தரப்பிரதேச மாநில பட்டியலின – பிற்படுத்தப்படோர் மாநாடு நடந்தது.
அதில் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி பங்கெடுத்து உரையாற்றினார். தனது உரையின் முடிவில் இப்படிக் குறிப்பிட்டார் கருணாநிதி. “பட்டியலின – பின்தங்கிக் கிடக்கின்ற சமுதாயத்திற்காக ஒன்றிய அரசினர் இரண்டு முன்னெடுப்புகளை நினைவில்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
ஒன்றிய அரசு வேலைவாய்ப்புகளில் பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம் ஒழுங்காக முழுமையாக நிரப்பப்பட வேண்டும். அதுபோல ஒன்றிய அரசாங்கத்தினுடைய வேலைவாய்ப்புகளில் – இனிமேல் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு, இவ்வளவு இடம் என்று ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.
அதையும் ஒன்றிய அரசு உடனடியாகச் செய்ய வேண்டும்” என்று கருணாநிதி உரை ஆற்றினார்கள்.
இதை வைத்துதான் 1978-ஆம் ஆண்டு பி.பி.மண்டல் தலைமையில் பிற்படுத்தப்பட்டோர் நிலை குறித்து ஆராய ஆணையம் அமைக்கப்பட்டது. 1980-ஆம் ஆண்டு பி.பி.மண்டல் அறிக்கை கொடுத்தாலும் அது அமல்படுத்தப்படவில்லை. பிரதமர் வி.பி.சிங் 1990-ஆம் ஆண்டு மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகளை அமல்படுத்த அழுத்தம் கொடுத்தவரும் கருணாநிதிதான். தமிழ்நாடு சட்டப்பேரவையில் இதற்காக தீர்மானமே நிறைவேற்றி வலியுறுத்தினார்.
பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களுக்கு, ஒன்றிய அரசு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் 27 விழுக்காடு இடஒதுக்கீடு கிடைத்தது. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சமூகநீதி அளித்த அந்த காரணத்திற்காகவே, அன்றைய தினம் வி.பி.சிங்கின் ஆட்சியை பா.ஜ.க. கவிழ்த்தது என்பதையும் உங்களுக்கு நான் நினைவூட்ட விரும்புகிறேன். இப்படி தொடர்ச்சியாக சமூகநீதியை நிலைநாட்ட நாம் போராடி வந்தாலும் – சமூகநீதிக்கான தடைகளும் விழவே செய்கின்றன.
இதில் பா.ஜ.க. பெரிய அளவிலான தடுப்புச் செயல்களை செய்து வருகிறது. சமூகநீதியை முறையாக பா.ஜ.க. அமல்படுத்துவது இல்லை. கடந்த 9 ஆண்டுகாலத்தில் ஒன்றிய அரசின் துறைகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 விழுக்காடு ஒதுக்கீடு முழுமையாக வழங்கப்படவில்லை. ஏழை எளிய பிற்படுத்தப்பட்ட – பட்டியலின – பழங்குடியின மக்கள் முன்னேறுவதை பா.ஜ.க. விரும்பவில்லை.
எனவேதான் அவர்கள் சமூகநீதிக்கு எதிராக இருக்கிறார்கள். திடீரென்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளார். இந்த நேரத்தில் நாம் கேட்க வேண்டியது, பிற்படுத்தப்பட்டோருக்கு சமூகநீதி வழங்கிய வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்த போது, இதே ஆர்.எஸ்.எஸ் எங்கே போயிருந்தது? அன்றைக்கு ஆட்சியை கவிழ்த்த பா.ஜ.க.வை பின்னால் இருந்து இயக்கியது இதே ஆர்.எஸ்.எஸ்.தானே?
எனவே, நாடாளுமன்றத் தேர்தல் வரப்போவதால் விளிம்புநிலை மக்களை ஏமாற்றுவதற்கு இப்போது மோகன் பகவத் இப்படி சொல்கிறாரே தவிர, உள்ளார்ந்த ஈடுபாடு காரணமாக அவர் சொல்லவில்லை.
பா.ஜ.க.வுக்கு உண்மையிலேயே சமூகநீதியில் அக்கறை இருக்குமானால், 9 ஆண்டுகால ஆட்சியில், ஒன்றிய அரசுப் பணியிடங்களில் 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை முழுமையாக செயல்படுத்தியிருக்க வேண்டும். ஏன், ஒன்றிய அரசு அலுவலகங்களில் காலிப்பணியிடங்கள் அனைத்தையும் சமூகநீதி அடிப்படையில் அவர்கள் நிரப்ப வேண்டும்.
அதனைச் செய்வார்களா? சமூகநீதி என்பது ஒரு மாநிலத்தின் பிரச்னை அல்ல. அனைத்து மாநிலங்களின் பிரச்சினை. குறிப்பாக பா.ஜ.க. ஆட்சியில் இருக்கும்போது இது அகில இந்தியாவிற்கும் பொதுவான பிரச்னை.
ஒவ்வொரு மாநிலத்துக்கும் சாதி – வகுப்பு அளவீடுகள் வேறுபடலாம். எடுத்துக்காட்டாக, தமிழ்நாட்டில் 69 விழுக்காடு இடஒதுக்கீடு செயல்பாட்டில் இருக்கிறது. அதேபோல் ஒவ்வொரு மாநிலத்திலும் இடஒதுக்கீடு வெவ்வேறு விழுக்காடாக இருந்தாலும், பிரச்னை ஒன்றுதான். அதுதான் புறக்கணிப்பு. எங்கெல்லாம் புறக்கணிப்பு – ஒதுக்குதல் – தீண்டாமை – அடிமைத்தனம் – அநீதி இருக்கிறதோ அங்கெல்லாம் அதனை முறிக்கும் மருந்தாக இருப்பதுதான் சமூகநீதி.
பட்டியலின – பழங்குடியின மக்களின் இடஒதுக்கீடு முறையாக வழங்கப்பட வேண்டும். பிற்படுத்தப்பட்டோர் – மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு முறையாக வழங்கப்பட வேண்டும். இவற்றை அகில இந்திய ரீதியில் கண்காணிக்க வேண்டும். சமூகரீதியாகவும் கண்காணிக்க வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்ததும், ஆதிதிராவிடர் – பழங்குடியினர் ஆணையத்தை அமைத்தது.
சமூகநீதி ஆணையத்தை அமைத்தது. சமூகநீதி கண்காணிப்புக் குழுவை அமைத்தது. இந்தக் கண்காணிப்புக் குழு, கல்வி, வேலைவாய்ப்பு, பதவிகள், பதவி உயர்வுகள், நியமனங்கள் ஆகியவற்றில் சமூகநீதி அளவுகோல், முறையாக முழுமையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதைக் கண்காணிக்கும். வழிகாட்டும். செயல்படுத்தும்.
இவை சரியாக நடைமுறைப்படுத்தப்படாவிட்டால், உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்குப் பரிந்துரை செய்யும். இதுபோல அனைத்து மாநிலங்களிலும் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். அகில இந்திய அளவில் இந்தக் குழு நிச்சயம் அமைக்கப்பட வேண்டும்.
இந்தக் கூட்டத்தின் வாயிலாக நிறைவேற்றப்பட இருக்கும் தீர்மானங்களை நாம் அனைவரும் இணைந்து முன்னெடுக்க வேண்டும்.
* உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் பதவிக்கான நியமனங்களில் அட்டவணை சாதிகள், பட்டியலிடப்பட்ட பழங்குடியினர், ஓ.பி.சிக்கள், பெண்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீட்டை கட்டாயமாக்குவதற்கு தேவையான அரசியலமைப்புத் திருத்தங்களை ஒன்றிய அரசு கொண்டுவர வேண்டும்.
* பதவி உயர்வு மற்றும் பணிமூப்பு நிர்ணயம் ஆகியவற்றில் OBC-களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.
* 2015-இல் சேகரிக்கப்பட்ட சமூகப் பொருளாதார சாதி கணக்கெடுப்புத் தரவை ஒன்றிய அரசு உடனடியாக வெளியிட வேண்டும்.
* SC/ST/OBC-களுக்கான விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் மற்றும் இடஒதுக்கீடுகளை ஆராய வேண்டும்.
* அரசின் கல்வி, வேலை வாய்ப்புகளில் தரப்படும் இடஒதுக்கீட்டை தனியார் வேலைவாய்ப்பிலும் பின்பற்ற வேண்டும்.
* மத்திய பல்கலைக்கழகங்கள், I.I.T-கள் , I.I.M-களில் OBC, SC & ST சமூகங்களைச் சேர்ந்த பேராசிரியர்களை விகிதாசார முறையில் நியமனம் செய்ய வேண்டும்.
* I.I.T, I.I.M மற்றும் I.I.S.C போன்ற முதன்மையான கல்வி நிறுவனங்களுக்கான சேர்க்கைகளில் ஓ.பி.சி, எஸ்.சி மற்றும் எஸ்.டி மாணவர்களுக்கு விகிதாசாரப்படி உரிய முன்னுரிமை அளிக்க வேண்டும்.
* SC/ST/OBC ஊழியர்கள் மற்றும் பணியாளர்களின் குறைகளைத் தீர்ப்பதற்கு ஒரு சமூகநீதிக் குழு இருக்க வேண்டும்.
*50 விழுக்காடு என்றுள்ள இடஒதுக்கீடு உச்சவரம்பு நீக்கப்பட வேண்டும்.
*தமிழ்நாட்டில் உள்ளது போல், ஒன்றிய அளவில், ஒன்றிய அரசின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு முழுமையாகச் செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்திட, அகில இந்திய அளவில் சமூகநீதிக் கண்காணிப்புக் குழுவினை நியமிக்க வேண்டும்.
இவை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் செயல்படுத்திக் காட்ட வேண்டும். அதிலும் குறிப்பாக, மிக முக்கியமாக இடஒதுக்கீடு வழங்கும் அதிகாரம் மாநிலங்களிடம் இருக்க வேண்டும். தமிழ்நாடு மாநிலத்தில் 69 விழுக்காடு இடஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது. சில மாநிலங்களில் 50 விழுக்காடு உள்ளது.
அந்தந்த மாநிலங்களின் மக்கள் விகிதாச்சாரம் அடிப்படையில் வழங்கப்பட வேண்டும். எனவே, 50 விழுக்காட்டுக்கு மேல் இடஒதுக்கீடு அளவீடு போகக் கூடாது என்று சொல்வதும் சரியல்ல. “இடஒதுக்கீடு மாநிலங்களின் உரிமை என்று அதிகாரத்தை மாற்றி வழங்கினால்தான், அந்தந்த மாநிலங்கள் தங்கள் மாநில மக்களுக்கு உரிய இடஒதுக்கீட்டினை வழங்க முடியும்.
இந்தியாவில் உண்மையான கூட்டாட்சிக் கருத்தியல் மலர்ந்தாக வேண்டும். நாம் மேற்கண்ட “சமூகநீதி” தீர்மானங்களுக்குச் செயல்வடிவம் கொடுக்க உழைப்போம். இந்திய நாட்டு மக்கள் அனைவரும் சமூகநீதிப் பெருவாழ்வு வாழப் பாடுபடுவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டர்லின் தெரிவித்தார்.