இந்த வாரம் ரிலீஸான படங்களில் எது டாப் ? – ஒரு மினி விமர்சனம்…!

கோலிவுட்டில் இந்த வாரம் வெளியான திரைப்படங்களின் மினி விமரசனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்…!

கோலிவுட்டில் இந்த வாரம் விக்னேஷ் சிவன் – பிரதீப்ரங்கநாதன் காம்போவில் உருவாகியிருக்கும் ‘எல்ஐகே’,  நட்டியின் ’டிஎன்2026’, செல்வராகவனின் ’மனிதன் தெய்வமாகலாம்’ முனிஸ்காந்தின் ‘காக்கி சர்க்கஸ்’ (வெப் சீரிஸ்) ஆகியவை வெளியாகி உள்ளன. இந்த படங்களின் மினி ரிவியூ இதோ உங்களுக்காக…!

எல்ஐகே (LIK)

விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இந்த படத்தின் கதை 2040ம் ஆண்டு சென்னையில் நடக்கிறது. லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற ஆப் மூலமாக  நண்பர்களை காதலர்களாக ஆக்குவது, அவர்களுக்கு மார்க் கொடுத்து காதலர்களை சேர்ப்பது, காதலை பிரிப்பது என டிஜிட்டல் பிஸினஸ் செய்கிறார் எஸ்.ஜே.சூர்யா. அந்த ஆப் மூலமாக காதலர்களாக ஆகிறார்கள் பிரதீப்ரங்கநாதனும், கீர்த்திஷெட்டியும். ஆனால், அந்த ஆப் அவர்கள் காதலுக்கு வெறும் 3 சதவீத மார்க் கொடுக்க, நமக்குள் செட்டாகாது என்று பிரேக்அப் சொல்கிறார் கீ்ர்த்தி.

ஒரு ஆப் எப்படி காதலை பிரிக்க முடியும். இதயம், உணர்ச்சிகள் சம்பந்தப்பட்ட விஷயத்தை ஒரு மிஷின் எப்படி செய்யும். என் உண்மையான காதலை நிரூபிக்கிறேன். அந்த ஆப் போலியானது என நிரூபிக்கிறேன் என பொங்கி எழுகிறார் ஹீரோ. அவர் காதல் ஜெயித்ததா? கீர்த்தி மனசு மாறினாரா? எஸ்.ஜே.சூர்யா கம்பெனிக்கு என்ன ஆனது என்பது மார்டன் லவ்வாக எடுத்து இருக்கிறார் இயக்குனர் விக்னேஷ்சிவன்

வழக்கமான சுறுசுறுப்பு, துறுதுறுப்பில் கலக்கலான நடிப்பை தந்து இருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். காதல் , அப்பாவுடன் பாசம், வில்லன் எஸ்.ஜே.சூர்யாவுடனான மோதல் உள்ளிட்ட காட்சிகளில் மிரட்டியிருக்கிறார். ஆனால் வரிசையாக அதே கெட் அப், ஒரே மாதிரி நடிப்பு தொடர்கிறது. அடுத்த படத்திலாவது மாற்றிடுங்க.

விக்னேஷ்சிவன் இயக்குனர் என்பதால் அனிருதின் பாடல்கள் பட்டையை கிளப்புகிறது. அதிலும் பிரதீப் சிறப்பா டான்ஸ் ஆடியிருக்கிறார். கிளைமாக்சில் அவருக்கும் எஸ்.ஜே.சூர்யாவுக்கு இடையேயான மோதல் சண்டை காட்சிகள் அப்ளாஸ். ஹீரோயின் கீர்த்திஷெட்டியும் கதைக்கு தக்கப்படி நல்ல நடிப்பை தந்து, பாடல்களில் அழகாக ஆடியிருக்கிறார். வில்லனாக வரும் எஸ்.ஜே.சூர்யா நடிப்பு, ஸ்டைல், அவரின் வழக்கமான பேச்சு, வில்லத்தனம் படத்துக்கு பிளஸ்.

ஹீரோ அப்பாவாக நீண்ட இடைவேளைக்குபின் சினிமாவில் நடிப்பில் மூலம் வந்திருக்கிறார் சீமான். டிஜிட்டல் அடிமைத்தனம், செல்போன், அவசர வாழ்க்கைக்கு எதிராக அவர் சொல்லும் கருத்து உண்மையின் காது கொடுத்து கேட்க வேண்டியது. ஹீரோயின் அம்மாவாக வாளமீனுக்கும் பாடல் புகழ் மாளவிகா வருகிறார். காமெடிக்கு யோகிபாபு, சாரா உட்பட பலர் இருக்கிறார்கள். ஆனாலும், சிரிப்பு அதிகம் வரவில்லை.

காதலை கொஞ்சம் வித்தியாசமாக சொல்லியிருக்கிறார் விக்னேஷ்சிவன். ரவிவர்மன் ஒளிப்பதிவில் கலர்புல்லாக நகர்கிறது படம். முதற்பாகம் கொஞ்சம் இழுக்கிறது. அடுத்த பாகம் பரபரப்பு. இளைஞர்கள், காதலர்கள், காதலை ரசிப்பவர்களுக்கு படம் பிடிக்கும்.

டிஎன்2026 (TN2026)

தமிழில் சரிவர பேச தெரியாத நட்டி எப்படியோ சினிமாவில் என்ட்ரி ஆகி, பண்ணையார் தம்பிராமையா தயவில் கோல்டன் ஸ்டார் குல்கந்த் குமார் ஆகிறார். அவருக்கு அரசியல் ஆசையும் வர, அதற்கும் தம்பிராமையா உதவி செய்ய, அவரால் கட்சி தொடங்க முடிந்ததா? தமிழக முதல்வர் ஆனாரா என்பது தான் டிஎன்2026 படத்தின் கரு. தம்பிராமையா கதை வசனம் எழுதியுள்ள இப்படத்தை அவரது மகன் உமாபதி இயக்கியுள்ளார்.

தேர்தல் சமயத்தில் வந்திருக்கும் பொட்டிலிக்கல் சாட்டியர் கதை. அரசியல்வாதிகளை மட்டுமல்ல, பல நடிகர்களையும் கலாய்த்து இருக்கிறார்கள். அதுவே படத்தின் பிளஸ். அதை யாரையும் காயப்படுத்தாமல் செய்து இருப்பதால் படத்தை ரசிக்க முடிகிறது, சிரிக்க முடிகிறது.

ஆரம்பம் முதல் கடைசி வரை நடிகன், அரசியல்வாதி கேரக்டருக்கு உயிர் கொடுத்து சிறப்பாக நடித்து இருக்கிறார் நட்டி. குல்கந்த் குமார் சம்பந்தப்பட்ட ஆரம்ப காட்சிகளில் காமெடி இருக்கிறது. அவர் வளர்ந்தவுடன் நட்டியின் நடிப்பும் மாறுகிறது. குல்கந்த் குமார் அரசியல்வாதி ஆக, அந்த வேகம் இன்னும் அதிகமாகிறது. பலரைப் பிரதிபலித்து நடித்திருந்தாலும் நட்டி நடிப்பில் தனித்துவம் தெரிகிறது. அவர் சினிமா வாழ்க்கையில் இது முக்கியமான படம்.

அவரைபோலவே பண்ணையாராக, நட்டியின் காட்பாதராக வரும் தம்பிராமையாவும் தனக்கே உரிய அப்பாவிதனமான, காமெடி ஸ்டைலில் கலக்கியிருக்கிறார். அவருக்கும், நட்டிக்குமான காட்சிகள் படத்தை சுவாரஸ்யம் இருக்கிறது. முதலில் ஒரு முகம், அடுத்து இன்னொரு முகம், கடைசியில் வேறொரு முகம்  என அவரும் மிரட்டியிருக்கிறார். இருவரையும் தவிர, அரசியல்வாதிகளாக வரும் இளவரசு, எம்.எஸ்.பாஸ்கர், ரசிகர் மன்ற விவவாசியாக வரும் ரெடின் கிங்ஸ்லீ, நட்டி மனைவியாக வரும் ஷ்ரிட்டா, காதலியாக வரும் யாஷிகா ஆனந்த்தும் மனதில் நிற்கிறார்கள். முதலில் நடிகையாகவும், பின்னர், இன்னொரு அதிரடி கேரக்டரில் வரும் சாந்தினியும் நல்ல தேர்வு. பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு, தர்புகா இசை கதைக்கு பிளஸ்.

அரசியல், சினிமா சார்ந்த கதை என்பதால் கலகலப்பு இருக்கிறது. வசனங்களில் அனல் பறக்கிறது. இவர் அவரா? இந்த வசனம் அதுவா? இந்த சீன் அதுவல்லவா என்ற விஷயங்கள் படத்தை கமர்ஷியலாக்கி இருக்கிறது. ஆனாலும், முதற்பாதியில் இருந்த வேகம், கலகலப்பு, பிற்பாதியில் மிஸ்சிங். கிளைமாக்சை இன்னும் அழுத்தமாக அல்லது காமெடியாக முடித்து இருக்கலாம். மற்றபடி, கோடையில் சிரித்து, ரசித்து வரக்கூடிய படமாக டிஎன்2026 இருக்கிறது.

விஜய் ரசிகர்களும், தவெக தொண்டர்களும், ரஜினி, கமல் ரசிகர்களும், அனைத்து கட்சியினரும் பார்க்கலாம். அவர்களுக்கான சீன்களும் படத்தில் இருக்கிறது

மனிதன் தெய்வமாகலாம்

சாலை வசதி இல்லாத கிராமத்தில் வசிக்கும் மக்களும், வெளியூர் படிக்க செல்லும் குழந்தைகளும் பாதிக்கப்படுகிறார்கள். இந்த பிரச்னையால் ஒரு பள்ளி மாணவி இறக்கிறாள். செல்வராகவன் குடும்பத்திலும் சிலர் இறங்க, பொங்கி எழுகிறார் செல்வராகவன். ஒரு கட்டத்தில் இவர்கள் சாவுக்கு சாலை வசதி மட்டும் பிரச்னை இல்லை என்பதை புரிகிறார். கோபத்தில் சில செயல்களை செய்கிறார். அது என்ன என்னது டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கிய மனிதன் தெய்வமாகலாம் படத்தின் கதை.

பாசக்கார கணவன், நுங்கு வியாபாரி, தாபா கடை நடத்துபவர் என அமைதியாக, இயல்பாக நடித்து இருக்கிறரா் செல்வராகவன். அவருக்கும், அவர் மனைவிக்குமான பாசக்காட்சிகள் ஓகே. தான் பாசமாக இருக்கும் குழந்தை இறக்க அவர் புலம்பவதும், ஒரு கட்டத்தில் தனது மனைவி தற்கொலை செய்ய அவர் பொங்குவதுமாக இருக்கிறார். ஆனாலும், இன்னும் அழுத்தமான நடிப்பை தந்த இருக்கலாம். கிளைமாக்சில் மட்டும் மனதில் நிற்கிறார். அவர் மனைவியாக வரும் குஷிரவி நல்ல தேர்வு, குடும்பபாங்காக வருபவர், ஒரு கட்டத்தில் வில்லனிடம் பொங்குகிறார். செல்வராகவன் அக்காவாக வரும் கவுசல்யாவும் ஒரு சில சீன்களில் ஸ்கோர் செய்து இருக்கிறார். அவர் கணவராக வரும் சதீஷ், அந்த குழந்தையும் மனதில் நிற்கிறார்கள். கிராமப்பின்னணி, குடும்ப வாழ்க்கை, கிளைமாக்ஸ் சீன் ஓகே.

சாலை வசதியின்மை, எம்எல்ஏ, வில்லன் அடாவடி என கதை சென்றாலும், கந்துவட்டிக்கொடுமை, வட்டிக்கு பணம் வாங்கும் பெண்கள் மீதான பாலியல் சீண்டல், அவமானம், அதற்கு பழிவாங்கல் என்ற கோணத்திலும் கதை செல்கிறது. சாலை, வட்டிக்கொடுமை என 2 நல்ல விஷயங்களை கையில் எடுத்த இயக்குனர், இன்னும் அழுத்தமாக, கமர்ஷியலாக கதை சொல்லியிருக்கலாம்.

காக்கி சர்க்கஸ் (வெப் சீரிஸ்)

ஒரு சிறைச்சாலையின் கண்காணிப்பாளர் ஆக இருக்கும் முனிஸ்காந்த் ரொம்ப நல்லவர். சிறந்த எழுத்தாளரும் கூட. பல புத்தகங்கள் எழுதியவர். ஜெயிலுக்கு வருபவர்களை புத்தகம் படிக்க சொல்பவர். புத்தகங்கள் வாழ்க்கையை மாற்றும் என்ற எண்ணம் கொண்டவர்.

 

இந்நிலையில், ஜெயிலில் இருக்கும் கண்ணகி கோயில் உண்டியல் திருடுபோகிறது. அதை முனிஸ்காந்த், சிறை போலீசாக இருக்கும் சுபாஷ் செல்வம் ஆகியோர் தேடுகிறார்கள். அதே ஊரில் கண்டக்கடராக இருக்கும் ராஜேஷ்மாதவன் மீது சந்தேகம் வருகிறது. அவர் திருடினாரா? எதற்காக திருடினார்? அந்த பணம் திரும்ப கிடைத்ததா என்பது ஜீடிவியில் வெளியாகி இருக்கும் காக்கி சர்க்கஸ் வெப்சீரிஸ் கதை. இதனை அமீன்பாரிப் இயக்கி உள்ளார்.

ஒரு திருடன், போலீஸ், சிறை கண்காணிப்பாளர் ஆகிய மூவரை சுற்றி கதை நடக்கிறது. இதை ரொம்ப சீரியஸ் ஆக இல்லாமல், காமெடி கலந்து கொண்டு போய் இருக்கிறார் இயக்குனர். அந்த திரைக்கதை பாணி புதிதாக, ரசிக்கும்படி இருக்கிறது.

எழுத்தாளர் கம் சிறை அதிகாரி கேரக்டரில் சிறப்பாக நடித்து இருக்கிறார் முனிஸ்காந்த். அவர் கேரக்டர் பாசிட்டிவ் ஆக இருக்கிறது. கொஞ்சம் கோபக்கார, உண்டியை தேடி அலையும் கேரக்டரில் சுபாஷ் செல்வம் மிரட்டியிருக்கிறார்.அவர் உடல்மொழி, நடிப்பு, காதல் காட்சிகள் செட்டாகி இருக்கிறது. இவர்களை விட, திருடனாக வரும் ராஜேஷ் மாதவன் யாருப்பா இவர் என்று கேட்கும் அளவுக்கு மிக இயல்பான அதேசமயம், அனைவரும் ரசிக்கும்படியாக தனி முத்திரை பதித்து இருக்கிறார். அவரின் செயல்பாடு, அவரின் காதல், அவர் திருடும் விதம், போலீசிடம் சிக்கலாம் தப்பிக்கும் காட்சிகள் இந்த வெப்சீரியஸ்க்கு பிளஸ்.

இவர்களை தவிர, சுபாஷ் செல்வம் காதலியாக வரும் வின்சு, சிறை கைதியாக வரும் அப்துல் லீ கேரக்டரும் இன்ட்ரஸ்ட்டிங். போலீஸ், திருடன் தவிர, கதை நடக்கும் ஊர், ஜெயில் செட், பல வித்தியாசமான கேரக்டர், காமெடி டோன் ஆகியவை சரிசமாக கலந்து ரசிக்க வைத்து இருக்கிறார் இயக்குனர். கதையில் சொல்லப்படும் விஷயமும் நல்லதாக இருக்கிறது.

போலீஸ், திருடன் கதை தவிர, சவப்பெட்டிகாரர் கதை, யூடியப்பர் கதை, ஒரு டென்சன் பார்ட்டி கதை, குடும்பகதை, இன்னொரு போலீஸ் என பல கதைகள் வருகின்றன. அவை கடைசியில் ஒரு புள்ளியில் இணைவது சூப்பர். கடைசி இரண்டு எபிஷோடு செல்லும் விதமும், திருப்பங்களும் ஜெட் வேகம். ஒளிப்பதிவாளர் நீரஜ் ரவி, இசையமைப்பாளர் சேவியர் பங்கும் கதை வேகமாக்குகிறது. ஒரு ரிலாக்ஸ் ஆன நேரத்தில் காக்கி சர்க்கஸ் 7 எபிஷோட்டை ரசித்து, மகிழலாம்

  சிறப்பு செய்தியாளர் : மீனாட்சிசுந்தரம்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.