தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி தொடங்கியது. தவெக அரசின் முதல் பட்ஜெட்டை அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார். மேலும், 6-ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். பட்ஜெட் மீதான விவாதம் ஆகஸ்ட் 7, 10, 11 ஆகிய தேதிகளில் நடைபெற்று, 12-ஆம் தேதி அமைச்சர்கள் பதிலுரை அளித்தனர்.
இந்த நிலையில், சுதந்திர தினத்தை ஒட்டி சட்டப்பேரவைக்கு 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு, மீண்டும் சட்டப்பேரவை ஆகஸ்ட் 17-ஆம் தேதி கூடியது. அப்போது முதல் மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதுவரை பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, மக்கள் மற்றும் மருத்துவ நல்வாழ்வுத்துறை, பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை உள்ளிட்ட துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடந்து முடிந்துள்ளன.
இந்த நிலையில், இன்றைய கூட்டத்தொடரில் இயற்கை வளங்கள் துறை, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் ஆகிய துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற உள்ளது.
உறுப்பினர்களின் கேள்விகளுக்கு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டி.கே.பிரபு, தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் குமார் ஆகியோர் பதிலுரை வழங்க உள்ளனர்.




