இரவு 7 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

தமிழ்நாட்டில் இன்று இரவு 7 மணி வரை 14 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “சுமார் 1.5 கிமீ உயரம் வரை வட கடலோர தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. சுமார் 0.9 கிமீ உயரத்தில் தெற்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை, தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.

இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று நீலகிரி, ஈரோடு, திருப்பூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கடலூர், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர், விழுப்புரம், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று இரவு 7 மணி வரை 14 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், விழுப்புரம், ஈரோடு, நாமக்கல், பெரம்பலூர், கடலூர், புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய 14 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.