“பாஜகவின் கிளையாக இருந்த அதிமுக, தற்போது திமுகவின் கிளையாக மாறிவிட்டது” – முதலமைச்சர் விஜய்!

பாஜகவின் கிளையாக இருந்த ஒரு கட்சி, தற்போது திமுகவின் கிளையாக மாறிவிட்டது என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகளில் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வேட்பாளர்கள் மற்றும் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டி வருகின்றனர். அந்தவகையில் முதலமைச்சர் விஜய் கடந்த 25-ஆம் தேதி மதுராந்தகத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில் இன்று தாராபுரம் தொகுதியில் பிரச்சாரம் மேற்கோள்கிறார்.

முதலமைச்சர் விஜயின் வருகையை ஒட்டி தாராபுரம் தொகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பிரச்சாரம் நடைபெறும் திடலில் அனுமதி சீட்டு பெற்ற 5000 பேர் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் 3500 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் தாராபுரத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள முதலமைச்சர் விஜய் சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் கோவை சென்றடைந்தார். கோவை சென்றடைந்த முதலமைச்சர் விஜய்க்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக முதலமைச்சர் விஜய் தாராபுரம் தொகுதியில் உள்ள மாருதி நகரில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட பொதுக்கூட்டம் மேடைக்கு வந்தடைந்தார். கோவையில் இருந்து திருப்பூர் வந்த முதலமைச்சர் விஜய்க்கு சாலையில் நின்ற பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து பிரசார பொதுக்கூட்ட இடத்திற்கு வந்த முதலமைச்சர் விஜய்க்கு அமைச்சர்கள் மற்றும் தவெக தலைவர்கள் வரவேற்பு அளித்தனர். அப்போது அதிமுக-வில் இருந்து விலகி தவெக-வில் சேர்ந்த செம்மலையை த.வெ.க. துண்டு அணிந்து கட்சியில் இணைத்துக் கொண்டார். மேலும், சமீபத்தில் அதிமுகவில் இருந்து விலகி த.வெ.க.-வில் இணைந்த தலைவர்கள் முதலமைச்சர் விஜயை வரவேற்றனர். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் இரண்டு விஜய பாஸ்கர்களும் முதலமைச்சர் விஜயை வரவேற்றனர். தொடர்ந்து தமிழ்தாய் வாழ்த்துடன் கூட்டம் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த் வரவேற்புரை வழங்கினார்.

தொடர்ந்து முதலமைச்சர் விஜய் பேசுகையில், “கொங்கு நாட்டு மக்களே.. தங்கங்களே… சிங்கங்களே. நான் முதல்வராக வரவில்ல. உங்க வீட்டு பிள்ளையா ..அண்ணானா தம்பியா, தாய்மாமான ஒரு உறவோடு வந்திருக்கிறேன். தவெக ஆட்சி அமைந்ததிலிருந்து கொடுத்த வாக்குறுதியை படிப்படியாக நிறைவேற்றி வருகிறோம். இதனை தொடர்ந்து நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டார். அப்போது,

பள்ளி, கோயில் அருகே டாஸ்மார்க் கடைகள் மூடல். 100 நாட்களில் 1 லட்சம் கோடி முதலீடு. முதல்வர் காப்பீட்டுத் தொகை ரூ. 5 லட்சத்தில் இருந்து ரூ. 25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. முதியோர் காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அம்மா உணவகங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. மகளிர் தொழில் முனைவோருக்காக சிங்கப்பெண் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. பெண்கள்பாதுகாப்பை உறுதிப்படுத்த சிறப்புப் படை அமைக்கப்பட்டு புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. ஆட்சிக்கு வந்ததும் ஊழல், லஞ்சமற்ற நிர்வாகத்தை முழு முனைப்போடு செய்து வருகிறோம். 100 நாள்களில் ரூ. 1 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. நெல், பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. 200 யூனிட் மின்சாரம் வழங்கப்படுகிறது. தாய்மாமன் திட்டத்தில் மோதிரம் வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகிறோம்.

திருப்பூரில் உயிரியல் பாதுகாப்பு நிலையம் அமைக்கப்படவுள்ளது. திருப்பூரில் பல்வேறு அடிப்படை கட்டமைப்புகள் நிறைவேற்றப்படவில்லை என்பது கவனத்துக்கு வந்துள்ளது.

இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படாமல் உள்ளது. கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. பாசன நீர் கிடைக்காமல் விவசாயிகள் சிரமப்படுகின்றனர். பொருளாதாரத்தில் தாராபுரம் பின் தங்கியுள்ளது. திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூடுதல் கட்டடம் என ரூ. 72 கோடியில் அமைக்க நடவடிக்கை எடுக்கபடும் என்றார்.

மன்னாராட்சி மனபான்மை எனக்கு இல்லை. அண்ணாவையும் மறந்துவிட்டு அவர் கொள்கையும் மறந்துவிட்டு தீய சக்தியான திமுகவுடன் கூட்டு வைத்திருக்கிறார்கள். மக்களின் நம்பிக்கையை காப்பாற்றுவோம். மக்களின் மத நம்பிக்கைய மதிக்கிறோம். கிருஷ்ண ஜெயந்திக்கும், கிறிஸ்துமசுக்கும், பக்ரீத்துக்கும் நாங்கள் வாழ்த்து சொல்வோம். குறுநில மன்னர்களை தோற்கடித்ததும் தவெக, மன்னர்களை தோற்கடித்ததும் சாதாரணமானவர்கள். கட்சியினரை ஒருமையில் பேச வைக்கிறார் மு.க.ஸ்டாலின். நான் பாசமாக பேசுகிறேன். ஆபாச நிதி, வன்ம நிதியை வளர்த்து வைத்திருக்கிறார் ஸ்டாலின், நீங்கள் பேசப் பேச நாங்கள் உயர்வோம். தரம் தாழ்த்தி பேசப் பேச தவெக உயர்ந்து கொண்டே இருக்கும்.

அதிமுகவும் திமுகவும் ஒன்றுதான். சர்காரிய கமிஷன் குறித்து நான் பேசியதற்கு திமுகவுக்கு மற்றும் பலர் முட்டு கொடுக்கிறார்கள். தவெகவுக்கு பேரம் பேச வேண்டிய அவசியமில்லை. எம்ஜிஆர், ஜெயலலிதாவிற்கு பிறகு திமுகவை எதிர்ப்பது தவெக தான். பாஜகவின் கிளையாக இருந்த ஒரு கட்சி, தற்போது திமுகவின் கிளையாக அதிமுக மாறிவிட்டது. திமுகவும், அதிமுகவும் ஒன்று தான், இருவருக்கும் ஒரே ஒனர் தான். யாரை எதிர்த்து எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கினார்? யாரை எதிர்த்து ஜெயலலிதா அரசியல் செய்தார்?. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை அவமானப்படுத்துவது போல் திமுகவுடன் அதிமுக சேர்ந்து சதி.

எம்.எல்.ஏ.வாக இருந்து கொண்டு சத்தியபாமா தவெகவுக்கு வரவில்லை, ராஜினாமா செய்துவிட்டுதான் வந்தார். இதில் எந்த பேரமும் கிடையாது. மக்களுக்கு நல்லது செய்வதற்காக எந்த எல்லைக்கும் செல்வேன். திமுக, அதிமுகவின் பொய்களை நம்பாதீர்கள்.. எம்.ஜி.ஆர்.க்கும், ஜெயலலிதாவுக்கும் துரோகம் செய்த அதிமுகவுக்கு ஓட்டு போடுவீர்களா?. கொங்கு மக்கள் எப்போதுமே உழைக்கும் மக்கள்.. எனவே தாராபுரம் மக்கள் அனைவரும் உங்கள் வெற்றி வேட்பாளர் சத்தியபாமாவுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.