இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்: தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்

தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெறும் போலியோ சொட்டு மருந்து முகாமை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்.

குழந்தைகளை அதிகம் பாதிக்கும் இளம்பிள்ளை வாதம் என்று அழைக்கப்படும் ‘போலியோ’ வைரஸை கட்டுப்படுத்த இந்திய அரசு ஆண்டு தோறும் 5 வயதுவரை உள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி வருகிறது. அதன்படி தமிழ்நாடு முழுவதும் இந்த ஆண்டுக்கான போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் இன்று நடைபெறுகிறது.

சென்னை, பாலவாக்கத்தில் உள்ள, அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து இயக்ககம் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமை தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முழுவதும், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 43,051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு தமிழ்நாட்டி 52.91 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 5 மணி வரை முகாம் நடைபெற உள்ளது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அருகில் உள்ள முகாமிற்கு அழைத்துச் சென்று போலியோ சொட்டுமருந்து போட்டுக்கொள்ளுமாறு அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.