சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுமார் 0.9 கிமீ உயரத்தில், மத்திய பிரதேசத்தின் மத்திய பகுதிகள் முதல் குமரிக்கடல் வரை விதர்பா, உள் கர்நாடகா, ராயலசீமா மற்றும் தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.
இதன் காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று மதியம் 1 மணி வரை 4 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.







