தமிழ்நாடு அரசின் இலட்சினை எங்கே? ஆளுநருக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கேள்வி

பொங்கல் பண்டிகைக்கான ஆளுநர் விருந்து அழைப்பிதழில் தமிழ்நாடு அரசின் இலட்சினை இடம்பெறாதது குறித்து மார்சிக்ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆளுநருக்கு கேள்வி எழுப்பியுள்ளார். 2023ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர்…

பொங்கல் பண்டிகைக்கான ஆளுநர் விருந்து அழைப்பிதழில் தமிழ்நாடு அரசின் இலட்சினை இடம்பெறாதது குறித்து மார்சிக்ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆளுநருக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

2023ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழில் ஒளவையாரின் பாடலோடு தனது உரையை தொடர்ந்தார். ஆளுநர் உரையில் தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையில் தமிழ்நாடு, திராவிடமாடல், அமைதிபூங்கா, தந்தை பெரியார், சமூக நீதி உள்ளிட்ட பல வார்த்தைகள் அடங்கிய வரிகளை ஆளுநர் வாசிக்காமல் தவிர்ததார்.

இதையடுத்து, தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை ஆளுநர் முறையாக படிக்கவில்லை எனவும், உரையில் ஆளுநர் சொந்தமாக சேர்த்துப் படித்த எதுவும் அவைக்குறிப்பில் இடம்பெறாது எனவும், சட்டப்பேரவையில் ஆளுநர் முன்பே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து பேசிக்கொண்டிருக்கும் போதே ஆளுநர் பாதியில் சட்டப் பேரவையை விட்டு வெளியேறினார்.

இந்நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி அரசியல் கட்சி தலைவர்களுக்கு ஆளுநர் சார்பில் கிண்டி ஆளுநர் மாளிகையில் வைத்து ஆண்டுதோறும் விருந்து உபரிசப்பு அளிக்கப்படும். கடந்த ஆண்டிற்கான அழைப்பிதழில் தமிழ்நாடு அரசின் இலட்சினை இடம்பெற்ற நிலையில், இந்த ஆண்டிற்கான விருந்து உபரிப்பு விழாவிற்கான ஆளுநர் அழைப்பிதழில் தமிழ்நாடு அரசின் இலட்சினை இல்லாமல் இந்திய அரசின் இலட்சினையோடு அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டுள்ளது.

https://twitter.com/suve4madurai/status/1612664641922142208?s=46&t=UTVKHAfENiUv6m1GE_xATg

 

இதுகுறித்து,  நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பதிவில், “கடந்த முறை வந்த அழைப்பிதழில் தமிழ்நாடு அரசின் இலட்சினை இருந்தது. இந்த முறை வந்துள்ள அழைப்பிதழில் மூன்று இடங்களிலும் இந்திய அரசின் இலட்சினை மட்டுமே இருக்கிறது.

நமது இலட்சினையில் தமிழ்நாடு என்று எழுதப்பட்டுள்ளதால் அதனைப் பயன்படுத்த மறுத்துள்ளார். இதேபோல தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்திலிருந்தும் வாடகை வீட்டிலிருந்தும் ரோசப்பட்டு வெளியேறுவார் என்று எதிர்பார்க்கலாமா?” என்று கேள்வி எழுப்பினார்.

அதேபோல் கடந்த ஆண்டிற்கான சித்திரை 1ம் தேதி நடைபெற்ற தேநீர் விருந்து அழைப்பிதழில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி என்றும், இந்த ஆண்டுக்கான பொங்கல் பெருவிழா அழைப்பிதழில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி என்றும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.