டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “பிரதமர் மோடியின் ஒரே வேலை மற்றவர்களை கிண்டல் செய்வதும், குறை கூறுவதும்தான். முதலில் உங்கள் நம்பகத்தன்மையை மக்களுக்கு நிரூபியுங்கள். உங்களுடைய அந்த ’56 இன்ச் மார்பு’ எங்கே போனது? இன்று நீங்கள் பிறரை விமர்சிக்கிறீர்கள், ஆனால் நாட்டிற்காக நீங்கள் என்ன செய்துள்ளீர்கள்?
நீங்கள் உங்கள் ஆதரவாளர்களிடம் ஒரு அறக்கட்டளை அமைக்கச் சொன்னீர்கள்; அவர்கள் திருடுவதற்காகவே அதை பயன்படுத்துகிறார்கள். ராம் மந்திர் அறக்கட்டளைக்கு ஆட்களைப் பரிந்துரைத்தீர்கள், அதில் உங்கள் சொந்த ஆட்களே ஈடுபட்டுள்ளனர்.
மேலும், NEET தேர்வு பிரச்சினை உள்ளது. லட்சக்கணக்கான மாணவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி, முழுமையான அழிவைச் சந்தித்து, துயரத்தில் உள்ளனர். அவர்களின் வாழ்க்கையை அழித்ததற்கு யார் பொறுப்பு? மோடி அரசும் பிரதமர் மோடியும்தான்.
தனது பலவீனங்களை மறைக்கவே இத்தகைய செயல்களில் அவர் ஈடுபடுகிறார். எந்த பிரதமரும் இவ்வாறு பேசக் கூடாது. ஒவ்வொரு பிரதமரும் பிரச்சினைகளை தீர்ப்பது பற்றி பேச வேண்டும்; பின்னர் கேலி செய்யப்படும் கருத்துகளை முன்வைக்கக் கூடாது.
இந்த கருத்துகளை நான் கண்டிக்கிறேன். பிரதமர் மோடி எதிர்காலத்தில் இத்தகைய கருத்துகளைத் தவிர்க்க வேண்டும். அவர்கள் ஆட்சியில் இருக்கும் வரை நாட்டிற்கு வளம் கிடையாது. அவர்கள் நீங்கிய பிறகே உண்மையான வளர்ச்சி ஏற்படும்,” என்றார்.
முன்னதாக இன்று காலை நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, “ஸ்கைரூட் ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் ஒட்டுமொத்த குழுவின் சராசரி வயது 28; நான் 56 வயது இளைஞர் ஒருவரைப் பற்றிப் பேசவில்லை” என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை மறைமுகமாக சாடி பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.




