பிளஸ் 1 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் வருகை புரியாத மாணவர்களுக்கு ஜூலை 2 ஆம் தேதி முதல் துணைத்தேர்வு நடைபெறும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொது தேர்வு முடிவுகள் மே 6-ம் தேதி வெளியானது. இதில் 94% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாக தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் மே 10-ம் தேதி வெளியானது. இதில், 91.55% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் பிளஸ் 1 பொதுத்தேர்வு மார்ச் 4-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை 7,534 பள்ளிகளை சேர்ந்த 3,89,736 மாணவர்கள், 4,30,471 மாணவிகள் என மொத்தம் 8, 20, 207 மாணவர்கள் எழுதினர். இதுதவிர, 5,000 தனித்தேர்வர்களும், 187 சிறை கைதிகளும் பிளஸ்-1 தேர்வை எழுதினார்கள்.
இதையும் படியுங்கள் : காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை! ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1800 கனடியாக உயர்வு!
இந்நிலையில், இன்று (மே 14) காலை ஏற்கனவே அறிவித்தபடி பிளஸ் – 1 தேர்வு முடிவுகள் இன்று 9.30 மணிக்கு வெளியானது. மொத்தம் 91.17% மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளதாக பள்ளிக்கல்வி தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. இந்தாண்டு மாணவர்களை விட மாணவிகள் 7.43% சதவிகிதம் அதிக தேர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில், பிளஸ் 1 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் வருகை புரியாத மாணவர்களுக்கு ஜூலை 2 ஆம் தேதி முதல் துணைத்தேர்வு நடைபெறும் என அரசு தேர்வுகள் இயக்ககம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், மாணவர்கள் தங்களது விடைத்தாள் நகல் பெற மற்றும் மறு கூட்டல் கோரி நாளை முதல் 20 ஆம் தேதி வரை தாங்கள் பயின்ற பள்ளி வாயிலாக விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
காலை 11 மணி முதல் மாலை 5 மணிக்குள் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிக்கு நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும் எனவும் தனித்தேவர்கள் மாவட்ட சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம் எனவும் அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.









