மனிதன் மாமனிதன் ஆவது எப்போது?

ஆசையே இந்த உலகத்திலுள்ள துயர்கள் அனைத்துக்கும் காரணம் என்றார் புத்தர். “ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்; ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள் ஆசை படப்பட ஆய்வரும் துன்பங்கள் !”” என்கிறார் திருமூலர். ஆசையும் துயரமும்…

ஆசையே இந்த உலகத்திலுள்ள துயர்கள் அனைத்துக்கும் காரணம் என்றார் புத்தர்.
“ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்; ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள்
ஆசை படப்பட ஆய்வரும் துன்பங்கள் !”” என்கிறார் திருமூலர். ஆசையும் துயரமும் ஒட்டிப் பிறந்த இரட்டையர்களாய் மனிதனை அலைக்கழிக்கின்றன.

‘அவன் தான் மனிதன்’ திரைப்படத்தில் “ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா; ஆசையென்னும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா” என்று கண்ணதாசன் எழுதியிருக்கிறார். இருப்பதையெல்லாம் கொடுத்துவிட்டு தெருவுக்கு வந்த கதாநாயகன் பாடுவது போன்ற இப்பாடல் ஒரு தத்துவமாகவே அமைந்துவிட்டது. ஆசை ஆட்டி வைக்கிறது. அதனால் அதைத் தொட்டில் என்கிறார் கண்ணதாசன்.

‘ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே
அடக்குவித்தால் ஆரொருவர் அடங்கா தாரே
ஓட்டுவித்தால் ஆரொருவர் ஓடா தாரே
உருகுவித்தால் ஆரொருவர் உருகா தாரே
பாட்டுவித்தால் ஆரொருவர் பாடா தாரே
பணிவித்தால் ஆரொருவர் பணியா தாரே
காட்டுவித்தால் ஆரொருவர் காணா தாரே
காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக் காலே’
என்று திருநாவுக்கரசர் பாடினார்.

அருட்பிரகாச வள்ளலாரும்,
‘பாட்டுவித்தால் பாடுகின்றேன்
பணிவித்தால் பணிகின்றேன் பதியே நின்னைக்
கூட்டுவித்தால் கூடுகின்றேன் குழைவித்தால்
குழைகின்றேன் குறித்த ஊணை
ஊட்டுவித்தால் உண்கின்றேன் உறக்குவித்தால்
உறங்குகின்றேன் உறங்கா தென்றும்
ஆட்டுவித்தால் ஆடுகின்றேன் அந்தோஇச்
சிறியேனால் ஆவ தென்னே’
என்று தன் செயல்கள் எல்லாவற்றுக்கும் இறைவனையே பொறுப்பாக்குகிறார்.

சைவ மரபில் வந்த இப்பாடல்கள் கண்ணதாசனிடம் வேறொரு வடிவம் பெறுகின்றன. கண்ணனைக் கைகாட்டி,

‘நீ நடத்தும் நாடகத்தில் நானும் உண்டு என்கிறார் கண்ணதாசன்.
என் நிழலில் கூட அனுபவத்தின் சோகம் உண்டு.
பகைவர்களை நானும் வெல்வேன் அறிவினாலே.
ஆனால் நண்பரிடம் தோற்றுவிட்டேன் பாசத்தாலே’
என்கிறார்.

‘பாஞ்சாலி உன்னிடத்தில் சேலை கேட்டாள்
அந்தப் பார்த்தனவன் உன்னிடத்தில் கீதை கேட்டான்
நான் இருக்கும் நிலையில் உன்னை என்ன கேட்பேன்
இன்னும் நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன்”… என்கிறார்.

“ஒருபுடை பாம்பு கொளினும் ஒருபுடை
அங்கண்மா ஞாலம் விளக்குறூஉந் – திங்கள்போல்
செல்லாமை செவ்வனேர் நிற்பினும் ஒப்புரவிற்கு
ஒல்கார் குடிப்பிறந் தார்” என்பது நாலடியார்.

ஒரு பக்கத்தினை ராகு என்னும் பாம்பு பிடித்துக் கொண்டாலும், தனது மற்றொரு பக்கத்தால் இவ்வுலகத்தினை ஒளி பெறச் செய்யும் திங்களைப் போன்று, வறுமையினால் எவ்வளவு துன்புற்ற போதிலும், உயர்குடிப்பிறந்தவர் பிறர்க்கு உதவி செய்வதில் மனம் தளரமாட்டர் என்பது அதன் விளக்கம்.

எல்லாவற்றையும் இழந்தாலும் அந்த மனம் துயரப்படவில்லை. அந்த நிலையில் தான்,
‘கடலளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன்
அது கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன்
உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கண்ணா
அதை உணர்ந்து கொண்டேன் துன்பம் எல்லாம் மறையும் கண்ணா’

என்று பாடுகிறான்.

மனமே மனித வாழ்வின் இன்ப துன்பங்களைத் தீர்மானிக்கிறது.
மனதைக் கட்டுப்படுத்திவிட்டால் துயரம் பறந்தோடுகிறது. ஆசையை அளவோடும் மனதைத் தன் கட்டுப்பாட்டிலும் வைத்திருக்கும் மனிதனே மாமனிதனாகிறான்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.